தனிநபர் வருமான வரி வசூலிக்காத நாடுகள்


தனிநபர் வருமான வரி வசூலிக்காத நாடுகள்
x

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புருனே, குவைத், ஓமன் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் தனிப்பட்ட முறையில் வருமான வரி வசூலிப்பதில்லை.

ஒரு நாட்டின் பொருளாதாரம் நிலையாக இருப்பதற்கும், அங்கு வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் வரி வசூலிக்கும் நடைமுறை இருக்கிறது. வர்த்தக நிறுவனங்கள் மட்டுமின்றி தனி நபர்கள் தாங்கள் ஈட்டும் வருவாய்க்கு ஏற்ப வருமான வரி செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் தனி நபர்களிடம் இருந்து வரியே வசூலிக்காத நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சுற்றுலா பயணிகளின் விருப்பமான தீவு நாடுகளுள் ஒன்று பஹாமாஸ். ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு குவிகிறார்கள். அதனால் அந்நாட்டின் பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதில் சுற்றுலா துறையும், கடல்சார் பொருளாதாரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் மூலமே அதிக வருவாய் ஈட்டுவதால் உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதனால் தங்கள் நாட்டில் வசிக்கும் குடிமக்களிடம் அவர்களின் வருமானத்தை மதிப்பிட்டு தனிப்பட முறையில் பஹாமாஸ் அரசு வரி விதிப்பதில்லை. அவர்கள் எந்த வழியில் பணம் சேமித்தாலும் அதற்கு எந்த விதமான வரியையும் செலுத்த வேண்டியது இல்லை. முத்திரைத்தாள் தாள் கட்டணம் உள்ளிட்ட ஒருசில வரி விதிப்பு முறைகளே அங்கு உள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், புருனே, குவைத், ஓமன் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் வளமான எண்ணெய் வளம் மற்றும் எரிவாயு கையிருப்பு கொண்டுள்ளன. உலகின் பல நாடுகளுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதால் வலுவான பொருளாதார கட்டமைப்பையும் கொண்டுள்ளன. அதனால் தங்கள் நாட்டில் வசிப்பவர்கள் ஈட்டும் வருமானத்திற்கு தனிப்பட்ட முறையில் வருமான வரி வசூலிப்பதில்லை.

மாலத்தீவுகள், மொனாக்கோ, நவுரு மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளன. மாலத்தீவு சுற்றுலாவையே நம்பி இருக்கிறது. மீன் பிடி தொழிலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. அவற்றின் மூலமே பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்கிறது. மொனோக்கோ பணக்கார நாடாக அறியப்படுகிறது. அதனால் அங்கு வசிப்பவர்களிடம் எந்தவிதமான மூலதன வரியும் விதிக்கப்படுவதில்லை.

கேமன் தீவுகள், டொமினிகா, பெர்முடா, பஹ்ரைன், செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், வனுவாட்டு, மேற்கு சாஹாரா, வாலிஸ் மற்றும் புடுனா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், நோர்போக் தீவு, டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் போன்றவைகளும் தனி நபர் வருமான வரி விதிப்பதில்லை.


Next Story