ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்


ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம்
x

ஜப்பானியர்களின் ஆயுள் ரகசியம், உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிப்பதும், அதற்கேற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவதும் அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்கிறது.

உலகிலேயே ஜப்பானியர்கள்தான் அதிக ஆயுட்காலம் கொண்ட நபர் களாக இருக்கிறார்கள். மாரடைப்பு, மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், இதய நோய் போன்றவை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அங்கு குறைவாக இருக்கிறது. உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிப்பதும், அதற்கேற்ற உணவு பழக்கத்தை பின்பற்றுவதும் அவர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க செய்கிறது. சிவப்பு இறைச்சியை குறைவான அளவிலேயே உட்கொள்கிறார்கள். அதே வேளையில் மீன் வகைகள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். அவர்கள் பின்பற்றும் உணவு முறைகள் ஆரோக்கியத்தை பேணுவதற்கும், இதய நோய்களை தடுப்பதற்கும் உகந்தவையாக இருக்கின்றன.

ஜப்பானில், உடல் பருமன் விகிதம் குறைவாக உள்ளது. ஆண்கள் 4.8 சதவீதம், பெண்கள் 3.7 சதவீதம் என்ற அளவிலேயே உடல் பருமன் கொண்டவர் களாக இருக்கிறார்கள். அவர்களுடன் ஒப்பிடுகையில் கனடாவில் 24.6 சதவீதம் ஆண்களும், 26.2 சதவீத பெண்களும் உடல் பருமன் கொண்டிருக்கிறார்கள். ஜி 7 நாடுகளின் கூட்டமைப்பின் தரவுகளின்படி ஜப்பானில் பிறக்கும் பெண் களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளது.

ஜப்பானிய ஆண்களின் ஆயுட்காலம் (81.1 ஆண்டுகள்) கனடா நாட்டு ஆண்களை (80.9 ஆண்டுகள்) விட அதிகமாக உள்ளது. அதுபோல் ஜப்பானிய பெண்களின் (87.1 ஆண்டுகள்) ஆயுட்காலம் கனடா நாட்டு பெண்களை (84.7 ஆண்டுகள்) விட அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த ஜப்பானியர்களின் சராசரி ஆயுட்காலம், 74.8 ஆண்டுகள். கனடா நாட்டினரின் ஆயுட்காலம் 73.2 ஆண்டுகளாக இருக்கிறது.

கனடா நாட்டினர், பிரஞ்சு, இத்தாலியர்கள் மற்றும் அமெரிக்கர்களுடன் ஒப்பிடும்போது, ​​ஜப்பானியர்கள் இறைச்சி (குறிப்பாக மாட்டிறைச்சி), பால் பொருட்கள், சர்க்கரை, இனிப்புகள், பழங்கள் மற்றும் உருளைக்கிழங்குகள் போன்றவற்றை மிகக் குறைவாகவே உட்கொள்கின்றனர்.

1960களின் முற்பகுதியில், ஜப்பானியர்களின் ஆயுட்காலம் மற்ற ஜி7 நாட்டினரை காட்டிலும் குறைவாகவே இருந்தது. செரிப்ரோவாஸ்குலர் நோய் மற்றும் வயிற்று புற்றுநோயால் ஏற்படும் இறப்பு அதிகமாக இருந்தது. அதனை தவிர்ப்பதற்கு உணவு பொருட்களில் உப்பின் அளவை குறைக்க தொடங்கினர். ஜப்பானியர்கள் 1973-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 14.5 கிராம் உப்பை உட்கொண்டனர். ஆனால் 2017-ல் ஒரு நாளைக்கு 9.5 கிராம் உப்பை மட்டுமே உணவில் பயன்படுத்தினார்கள். தற்போது அந்த அளவையும் குறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


Next Story