தன்னம்பிக்கை கொடுக்கும் 'டாக்டர் அம்மா'..!


தன்னம்பிக்கை கொடுக்கும் டாக்டர் அம்மா..!
x

8 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட ராஜஸ்தான் பெண், கணவர் குடும்பத்தார் அளித்த ஒத்துழைப்பால் எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவராகி அசத்தியுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த ரூபா, சிறு வயதிலிருந்தே படிப்பில் படுசுட்டி. கணிதத்தில் புலியாக இருந்தார். அதனால் உயர் வகுப்புகளுக்கு கணிதப்பாடம் எடுக்குமாறு ரூபாவை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் திருமணம் அவரது படிப்புக்கு தடைபோட்டுவிட்டது. கடும் போராட்டத்திற்கு பிறகு டாக்டரான கதையை ரூபாவே தொடர்கிறார்…

''சிறு வயதிலேயே எனக்கு திருமணம் ஆனாலும், என்னைப் படிக்க வைக்க வேண்டும் என்பதில் என் தந்தை உறுதியாக இருந்தார். எங்கள் வீட்டிலிருந்தபடியே என்னைப் படிக்க வைக்க விரும்பினார். ஆனால், நீண்ட நாட்கள் பிறந்த வீட்டில் இருப்பதற்கு என் மாமியார் அனுமதிக்கவில்லை. இதனால் கோபமடைந்த என் தந்தை 'என் குழந்தையை உங்களால் படிக்க வைக்க முடியுமா?' என்று கேட்டார். அதற்கு என் மைத்துனர், ரூபாவை நாங்கள் படிக்க வைக்கிறோம் என்று உறுதியளித்தார்.

இதைக்கேட்டு என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. என் மாமியார் குடும்பத்தினர் இரவு, பகலாக உழைத்து என்னைப் படிக்க வைத்து, என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினர். 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அங்கு நான் நல்ல மதிப்பெண் எடுத்ததால், எனக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்தனர்.

முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் 22 ஆயிரமாவது ரேங்க் பெற்றேன். எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு கடன் வாங்கினேன். அதோடு, என் கணவரும் மைத்துனரும் கூடுதலாக உழைத்து என்னைப் படிக்க வைத்தனர்.

என் நாத்தனார் படிப்பதற்கு உற்சாகம் அளித்தார். என் கணவர் ஒவ்வொரு நிலையிலும் எனக்கு ஆதரவாக இருந்தார். நான் டாக்டராக வேண்டும் என்று மாமியார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். கல்லூரியில் எனக்குக் கிடைத்த நண்பர்களும், கடினமான சூழலை அழகிய தருணமாக்கினார்கள். கல்லூரியில் படித்த 5 ஆண்டுகளும் 3 தோழிகள் எனக்குப் பேருதவியாக இருந்தார்கள்'' என்றார்.

எம்.பி.பி.எஸ். படிப்பின் முதல் 2 ஆண்டுகளில், ரூபாவிற்கு திருமணமான விஷயம் உடன் படிப்பவர்களுக்கு தெரியாது. ஆனால் 3-ம் ஆண்டு தொடக்கத்தில் தெரியவரவே, பல இன்னல்களை சந்தித்திருக்கிறார். அதை அவரே விளக்குகிறார்.

''கல்லூரியில் எனக்கு நெருக்கமான 3 தோழிகளுக்கு மட்டுமே, என் திருமண வாழ்க்கை பற்றி தெரிந்திருந்தது. நானும் யாரிடமும் வெளிக்காட்டிக்கொள்ளாமல், படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். வீட்டில் கிராமிய வழக்கப்படி லெஹங்கா சோலி அணிவேன். ஆனால் கல்லூரிக்கு சென்றால் ஜீன்ஸ் அணிவேன். ஆனால் என் கதை ஒரு செய்தித்தாளில் வெளியானபோது, அனைவருக்கும் விஷயம் தெரிந்து போனது. ஒவ்வொருவரும் இது பற்றி விசாரிக்கத் தொடங்கினார்கள். அந்தச் சூழலில்தான் 3 தோழிகள் எனக்குப் பாதுகாப்பு கேடயமாக மாறினார்கள்'' என்றதோடு, டாக்டர் கனவை ஒரு கருவை சுமந்தபடி துரத்தி பிடித்த கதையையும் விளக்கினார்.

''3-ம் ஆண்டு படிக்கும்போது, கொரோனா தலை தூக்கியது. வீட்டுக்கு வந்த சமயத்தில் கர்ப்பமானேன். இறுதித் தேர்வை எழுதும்போது என் குழந்தை பிறந்து 25 நாட்கள்தான் ஆகியிருந்தது. என் சகோதரியும், மாமியாரும் குழந்தையைப் பார்த்துக் கொண்டார்கள். நானும் எம்.பி.பி.எஸ் இறுதி ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.

இப்போது நான் டாக்டர், அதேசமயம் அம்மா என்ற பொறுப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. முதுகலைப் படிப்பை முடித்த பிறகு என் கிராமத்திலேயே மருத்துவமனை திறக்கவுள்ளேன். என் கனவை நிறைவேற்ற நிலத்தைக்கூட விற்கத் தயாராக இருப்பதாக என் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

எந்தப் பெண்ணும் கடினமான பாதையைத்தான் தேர்வு செய்ய வேண்டும். நம்மால் எதுவும் முடியும் என்று நான் நம்புகிறேன். கனவு காண மறக்கக் கூடாது. அத்தகைய கனவுகளோடு போராட வேண்டும்" என்று தன்னம்பிக்கை கொடுக்கிறார், இந்த டாக்டர் அம்மா.


Next Story