சிந்திக்கும் எந்திரங்கள்


சிந்திக்கும் எந்திரங்கள்
x

நாம் விருப்பப்பட்ட பொருள் ஒன்றின் விவரங்களை நம் செல்போனின் உதவியோடு இணையத்தில் தேடியிருப்போம். சில மணி நேரம் கழித்து அந்த பொருளை தேடியதையே நாம் மறந்திருப்போம். ஆனால் வேறு ஒரு தகவலை இணையத்தில் நாம் தேடும்போது, முன்பு நாம் தேடிய பொருட்களின் விவரங்கள் தொடர்பான விளம்பரங்கள் வரும்.

எப்புட்றா...? நான் அதுல தேடுனது இந்த இணையதளத்துக்கு தெரிஞ்சுச்சு என்ற கேள்வி நமக்கு எழும். அதேபோல் நாம் யூடியூபில் ஒரு பாடல் பார்த்துகொண்டிருக்கும்போது அதில் வரும் விளம்பரங்களில் சில நாம் இருக்கும் ஊர் சம்பந்தப்பட்டதாக இருக்க பார்த்திருப்போம். இது நம்மை மீண்டும் எப்புட்றா...? என்றே சொல்ல வைக்கும்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம், ஏ.ஐ. தொழில்நுட்பம் என்று பதில் கிடைக்க கேட்டிருப்போம். இணையத்தில் ஏ.ஐ., டி.வி.யில் ஏ.ஐ., ஏ.சி.யில் ஏ.ஐ., 'சாட்-ஜி.பி.டி.'-உலகை புரட்டி போடும் ஏ.ஐ., கூகுள் நிறுவனத்தின் 'பார்ட்' எனும் ஏ.ஐ., ஏ.ஐ. சாட்பாட்டுகள்... இப்படி பல்வேறு பரிணாமங்களில், பல பரிச்சயமான, சில புதுமையான வார்த்தைகளுடன் ஏ.ஐ. என்ற சொல் உபயோகிக்க கேள்வி பட்டிருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு அது வேற்று கிரக வார்த்தையாகவே இருந்து வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய நிகழ்வாய், இதுவா அது? என்று சொல்ல வைக்கும் அளவிற்கு நம் வாழ்வின் அங்கமாகிய ஏ.ஐ. பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே பார்க்கலாம்.

ஏ.ஐ என்றால் 'ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.

சிந்திக்க வைக்கும் தொழில்நுட்பம்

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளில் இருந்தும் மனிதர்களை வேறுபடுத்தி காட்டுவது அவனின் ஆறாம் அறிவும், அந்த அறிவின் மூலம் அவனுக்கு இருக்கும் சிந்திக்கும் ஆற்றலும் தான். மனிதன் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் திட்டமிட்டு, அதைப்பற்றி அறிந்துகொண்டு, அதன் நுட்பங்களை தெரிந்து கொண்டு, அதில் ஏற்படக்கூடிய இடர்களை அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆராய்ந்து வெற்றிகொள்வது அல்லது நிறைவு செய்வதில் தனித்துவமானவனாகவே இருக்கிறான்.

இதை மனிதனின் அறிவு மற்றும் ஆற்றலால் உருவான தொழில்நுட்பங்கள் நமக்கு ஊர்ஜிதப்படுத்தி கொண்டே இருக்கின்றன. அதேபோல் ஒரு செயலை மீண்டும், மீண்டும் செய்யும்போது அதை இன்னும் துரிதமாக செய்யும் அளவிற்கு அனுபவமும் அவனுக்கு கிடைக்கிறது.

இவ்வாறு ஒரு செயலை எந்த ஒரு பிசகுமின்றி, திறம்பட செய்யும் மனிதர்களை புத்திக்கூர்மை, நுண்ணறிவு அதிகம் உள்ளவர்கள் என்றும் அழைக்க கேட்டிருப்போம். நிபுணத்துவம் மிக்க ஒருவர் நுண்ணறிவுடன் சிந்தித்து செயல்படுவது போல தன்னிடம் இருக்கும் தரவுகள், பெறும் அனுபவங்கள் மூலம் எந்திரங்களையும் தானாக சிந்திக்க வைக்கும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என அழைக்கப்படுகிறது.

மனித உதவி இல்லாமல்...

அதாவது மனிதன் சிந்தித்து செயல்படுவது போன்று, பல்வேறு கணினி புரோக்ராம்களை(செய்நிரல்களை) உருவாக்கி அவற்றை கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்து, அதன் வழியாக ஒரு எந்திரத்தை சிந்தித்து செயல்பட வைக்கும் முறையினை செயற்கை நுண்ணறிவு என்று எளிமையாக சொல்லலாம்.

கேட்டல், பார்த்தல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல், கற்றல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் என மனிதன் செய்யக்கூடிய பல்வேறு நுட்பமான பணிகளை, மனிதனின் உதவி இல்லாமல் ஒரு எந்திரமே தானாக செய்திட இந்த செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.

கணினி அறிவியலின் பரந்த கிளையான செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு கம்ப்யூட்டர் மற்றும் கம்ப்யூட்டரால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது ஒரு மென்பொருளை, மனிதனை போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் ஒரு வழிமுறையாகும். மனித மூளையின் வடிவங்களை படித்து, அறிவாற்றல் செயல்முறையை பகுப்பாய்வு செய்து இந்த ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறைவேற்றப்படுகிறது.

ரோபோக்கள்

ரோபோ என்ற வார்த்தையை பார்த்தவுடன் நம் நுண்ணறிவானது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை பற்றி சிந்தித்திருக்க கூடும். ஆம்... அதில் வரும் 'சிட்டி' ரோபோ ஒரு செயற்கை நுண்ணறிவு ரோபோ தான். அப்படி என்றால் செயற்கை நுண்ணறிவு என்றால் ரோபோவா? என்று நமக்கு தோன்றலாம் அது தான் இல்லை.

ரோபோ என்ற சொல் செக் குடியரசை சேர்ந்த நாடக கலைஞர் இயற்றிய 'ரோசம் பிரபஞ்சத்தின் ரோபோக்கள்' என்ற நாடகத்தில் தான் முதன்முதலில் உபயோகிக்கப்பட்டது. இது கட்டாய தொழிலாளர்கள் என்று பொருள்படும் 'ரோபோடா' என்ற செக் வார்த்தையில் இருந்து உருவானதாக கூறப்படுகிறது. இப்படி ரோபோக்கள் பற்றிய கருத்துகளை தன் புத்தகத்தின் மூலம் உலக அளவில் பிரபலப்படுத்திய பெருமை அமெரிக்க எழுத்தாளர் ஐசக் அசிமோவையே சேரும்.

புதிய தொழில்நுட்பம் அல்ல

ரோபோக்கள் என்னும் எந்திரங்கள் ஒரு பணியை செய்வதற்கு தனக்கு முன்கூட்டியே உள்ளீடு செய்யப்பட்ட உத்தரவுகளின்படி அந்த பணியை மட்டும் செவ்வனே செய்யக்கூடியதாகும். எந்த பணிக்காக அவைகள் உருவாக்கப்பட்டதோ அதை தவிர வேறு பணிகளை ரோபோக்களால் செய்ய இயலாது. மாறாக செயற்கை நுண்ணறிவு என்பது மேற்கூறியது போல மனித நுண்ணறிவு போன்ற செயல்களை ஒத்து இயற்றப்படும் கணினி புரோக்கிராம்களாகும். ரோபோக்கள் சொன்னதை மட்டும் செய்யக்கூடியவைகளாகும், செயற்கை நுண்ணறிவு என்பது அவற்றை சிந்தித்து செயல்பட வைக்ககூடியதாகும்.

செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.) என்பது நவயுக தொழில்நுட்பம் என்றே நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் செயற்கை நுண்ணறிவு என்பது புதிய சொல் அல்ல, ஆராய்ச்சியாளர்களுக்கு இது புதிய தொழில்நுட்பம் அல்ல. இந்த தொழில்நுட்பம் நாம் நினைப்பதை விட மிகவும் பழமையானது என்றே சொல்லப்படுகிறது. ஏன்.... பண்டைய கிரேக்க மற்றும் எகிப்திய புராணங்களில் கூட எந்திர மனிதர்கள் பற்றி சொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவின் பரிணாம வளர்ச்சி

தற்போது ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கு முதலில் விதை போட்டது 1943-ம் ஆண்டு வாரன் மெக்குல்லோ மற்றும் வால்டர் பிட்ஸ் ஆகிய இருவரும் முன்மொழிந்த செயற்கை நியூரான் மாதிரிகள் என்று சொல்லப்படுகிறது. அதைத்தொடர்ந்து 1950-ம் ஆண்டு எந்திர கற்றலில் முன்னோடியாக திகழ்ந்த ஆங்கில கணிதவியலாளர் ஆலன் டூரிங் 'கணினி எந்திரங்கள் மற்றும் நுண்ணறிவு' என்ற ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதன்படி மனித நுண்ணறிவுக்கு நிகராக எந்திரங்களின் நுண்ணறிவு செயல்பாடுகளை கண்டறிய ஒரு சோதனையை முன்மொழிந்தார். அந்த சோதனை டூரிங் சோதனை என்று அழைக்கப்பட்டது.

1956-ம் ஆண்டு நடந்த டார்த்மவுத் மாநாட்டில் அமெரிக்க கணினி விஞ்ஞானி ஜான் மெக்கார்தி 'ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார். 1972-ம் ஆண்டு முதல் மனித உருவிலான ரோபோட்டான 'வாபாட்-1' ஐப்பானியர்கள் உருவாக்கினர். 1980-ம் ஆண்டு ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு முன்பைவிட தொழில்நுட்ப மேம்பாடுடன் மீண்டும் வந்தது. மனிதனைப்போலவே முடிவெடுக்கும் திறன்களை கொண்டுள்ள புரோக்ராம்களுடன் இந்த மேம்பட்ட அமைப்புகள் செயல்படுத்தப்பட்டது.

1997-ம் ஆண்டு ஐ.பி.எம். நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'டீப் ப்ளூ' எனப்படும் சூப்பர் கம்ப்யூட்டர் அன்றைய உலக செஸ் சாம்பியனான கேரி காஸ்பரோவை தோற்கடித்து, உலக செஸ் சாம்பியனை வென்ற முதல் கணினி என்ற பெருமையைப் பெற்றது. 2002-ம் ஆண்டு செயற்கை நுண்ணறிவு தூசு உறிஞ்சும் கருவியின் வழியாக நம் வீடுகளுக்குள் நுழைந்தது.

2006-ம் ஆண்டு பேஸ்புக், டுவிட்டர், நெட்பிளிக்ஸ் நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவை உபயோகிக்க தொடங்கினர்.

எந்திர கற்றல்

செயற்கை நுண்ணறிவின் செயல்பாட்டுக்கு அடிப்படையாக கருதப்படுவது தரவுகள். எவ்வளவு அதிக தரவுகள் உள்ளதோ அதற்கு ஏற்றார்போல் துல்லியமாக அவை செயல்படும். செயற்கை நுண்ணறிவானது எந்திர கற்றல் முறையின் மூலம் செயல்படுகிறது. செயற்கை நுண்ணறிவின் உட்பிரிவாக கருதப்படும் இந்த எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு கொண்ட எந்திரங்கள் அதனிடம் உள்ள தரவுகளைக்கொண்டே அந்த செயலை தானே செய்வதற்கான வழிவகைகளை கற்றுக்கொள்ள செய்கிறது.

அதாவது நாம் புதிதாக ஒன்றை பயிற்சி செய்து கற்றுக்கொண்டு, நாளடைவில் அதில் நிபுணத்துவம் பெறுவதுபோல, எந்திர கற்றலானது இதேபோல் செயல்பட்டு தரவுகளை ஆய்வு செய்து அதன் மூலம் இவ்வாறு இருக்கலாம் என்று கணிக்க அல்லது முடிவுகளை எடுக்கிறது. உதாரணமாக தானியங்கி கார்களை உருவாக்கும் முனைப்பில் உள்ள பல நிறுவனங்கள் அந்த கார்களை அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் எவ்வாறு செல்லவேண்டும் என கற்றுக்கொடுக்க முயற்சிக்கவில்லை.

மாறாக, அவர்கள் அந்த காரை சுற்றி அந்த நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளை சென்சார்கள் கொண்டு ஆராய்ந்து அந்த கார்கள் இதுவரை எதிர்கொள்ளாத சூழ்நிலையாக இருந்தாலும் அதனிடம் கொடுக்கப்பட்ட தரவுகள் கொண்டு அதற்கு ஏற்றவாறு சரியாக செயல்படுவதற்கான வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

பல்துறையில் பயனளிக்கும் ஏ.ஐ.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல்வேறு துறைகளில் தன் தடம் பதித்து பல்வேறு வகைகளில் துணைபுரிந்து வருகிறது. ஏ.ஐ. மருத்துவத்துறையில் நோயை கண்டறிய உதவுவது மட்டுமின்றி அதற்கான சிகிச்சைகளை பரிந்துரை செய்தல், நோயாளிகளை கண்காணிப்பது, அறுவை சிகிச்சையில் உதவி புரிவது போன்றவற்றை செய்கிறது. கல்வித்துறையில் இது மாணவர்களை தனிப்பட்ட முறையில் கண்காணிப்பது, மதிப்பிடுவது மற்றும் ஏதுவான பாடத்திட்டங்களை உருவாக்குவது போன்றவற்றை மேற்கொள்கிறது.

தொழில்துறையில் புதிய தயாரிப்புகளை வடிவமைக்கவும், உற்பத்தியை மேம்படுத்தவும், தரக்கட்டுப்பாடு, பாதுகாப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. போக்குவரத்து துறையில் தானியங்கி கார்கள் உருவாக்குவதற்கும், சரியான வழித்தடங்களை காட்டுவதற்கும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதற்கும், மாசு கட்டுப்பாட்டிற்கும் வெகுவாக துணை புரிகிறது.

விடை தருவதில் வல்லமை

மேலும் பொழுதுபோக்கு துறையில் பாடல் இயற்றவும், வீடியோ கன்டென்டுகள் உருவாக்கவும், கிராபிக்ஸ் மேம்படுத்தவும் உதவுகின்றது. செய்தித்துறையில் ஏ.ஐ.செய்தி வாசிப்பாளர்கள் செய்திகள் வாசிக்கவும், வானிலை அறிக்கைகள் தெரிவிக்கவும் என தூள் கிளப்புகிறார்கள்.

பல்வேறு துறைகளில் புதுமைகளை புகுத்தி உதவிகரமாக இருக்கும் ஏ.ஐ. மனிதனால் நேரடியாக செய்யமுடியாத மற்றும் ஆபத்தான பல பணிகளை மிக சுலபமாகவும், விரைவாகவும் செய்வதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி அதிக தரவுகளை ஆராய்ந்து குறைந்த நேரத்தில் நம் தேடலுக்கான விடை தருவதில் வல்லமை படைத்துள்ளது.

இயற்கை சீற்றம் ஏற்பட்ட இடங்களில் இடர்பாடுகளில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கும் ஏ.ஐ. ரோபோக்கள் துணை புரிகின்றன. ஏ.ஐ.சாட்பாட்டுகள் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதில் பேருதவியாக இருந்து வருகிறது. மொழிபெயர்ப்பில் ஏ.ஐ.யின் பங்கு அளப்பரியது.

அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஏ.ஐ.

நன்மைகள் பல இருந்தாலும் இந்த ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பணி இழப்புகள், வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த செயற்கை நுண்ணறிவு தயாரிப்பதற்கான பொருட்செலவும் அதிகப்படியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் மனிதர்கள் தனித்து இயங்குவதை மறந்து சாதரண விஷயங்களுக்கு கூட தொழில்நுட்பத்தையே சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஏ.ஐ.யின் அபரிமிதமான வளர்ச்சி மற்றும் பங்களிப்பு அதற்கான பாதுகாப்பு நெறிகளை உருவாக்கிட வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த மாநாடுகளும் உலக அளவில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மனித குலத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதற்கு ஏ.ஐ. போன்ற தொழில் நுட்பங்கள் அயராது பணிபுரிந்து வரும் வேளையில் 'விஞ்ஞானம் கட்டுக்கடங்காது நெறி தவறி போகும்போது பகுத்தறிவு அதனை பக்குவப்படுத்தவும், பயனுள்ளதாக்கிடவும் வேண்டும்' என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளையும், விஞ்ஞானத்தால் மனித இனத்தின் புகழை கூண்டு கட்டி சந்திரனுக்கு கொண்டு செல்லவும் முடியும், கூண்டோடு அழிவு பாதைக்கு அனுப்பவும் முடியும். அறிவு கண்கள் இயற்கை நுணுக்கங்களை எடுக்கும்போது இதயக்கண்கள் பழுதாகி விடக்கூடாது என்ற நேருவின் வார்த்தைகளையும் நினைவு கூறவே தோன்றுகிறது.

நமக்கு பரிச்சயமான ஏ.ஐ.க்கள்



நாம் இன்று தவிர்க்க முடியாமல் பயன்படுத்தும் 'ஜிமெயில்' நம் செல்போன்களில் உள்ள முகத்தை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. அமேசானின் 'அலெக்சா', ஆப்பிளின் சிரி, 'கூகுள் அசிஸ்டன்ட்', ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரம், சில எலக்ட்ரானிக் நிறுவனங்களின் ஏ.சி., பிரிட்ஜ் உள்ளிட்டவைகளும், ரெயில்வே முன்பதிவு இணையதளத்தில் வரும் 'திஷா', இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் 'பாய்' என்னும் ஏ.ஐ. சாட்பாட்டுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் உரையாடல் அல்லது உரைகள் மூலம் பயனாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றன.


செயற்கை நுண்ணறிவு செய்திவாசிப்பாளர்கள்



2018-ம் ஆண்டு சின்ஹுஅ என்ற சீன தொலைக்காட்சி தான் முதன்முதலில் கியூ ஹாவ் என்று பெயரிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை தங்கள் தொலைக்காட்சியில் உபயோகித்தது. இது சீன மொழி மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் திறன் படைத்தாக இருந்தது. இந்த வரிசையில் 'ஆஜ் தக்' தொலைக்காட்சியின் 'சனா' இந்தியாவின் முதல் ஏ.ஐ. செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெறுகிறது.

ஒடிசா மாநில தொலைக்காட்சியின் 'லிசா', நியூஸ் 18 பஞ்சாபின் 'கவுர்', கன்னட பவர் தொலைக்காட்சியின் சவுந்தரியா, தெலுங்கின் பிக் தொலைக்காட்சியின் 'மாயா' உள்ளிட்டவர்கள் செய்தித்துறையில் தூள் கிளப்பி வருகிறார்கள். இதில் சில ஏ.ஐ. பல மொழிகளில் செய்தி வாசிப்பதோடு நேயர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்க பயிற்சி அளிக்கப்பட்டவை.



உலகின் முதல் ' ரோபோ '

மனிதனைப்போலவே சிந்தித்து செயல்படக்கூடிய செயற்கை எந்திரங்களை உருவாக்க வேண்டும் என மனிதன் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே சிந்திக்க தொடங்கி விட்டான். 15-ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கண்டுபிடிப்பாளர்கள், பொறியாளர்கள் இந்த முயற்சிகளை மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. இத்தாலிய மறுமலர்ச்சியின் மேதையாக கருதப்படும் லியானர்டோ டாவின்சி 1495-ம் ஆண்டு உருவாக்கிய எந்திர படைவீரன் உலகளவில் முதல் ரோபோ என கருதப்படுகிறது.

தானியங்கி படைவீரன் என்று அழைக்கப்பட்ட அந்த ரோபோ பார்ப்பதற்கு அச்சு அசலாக உண்மையான வீரன் போன்று அமைப்பு கொண்டது மட்டுமின்றி அவர்களை போலவே அசைவுகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


Next Story