ஆண்டாளுக்கு சாற்றப்படும் திருப்பாவை பட்டு


ஆண்டாளுக்கு சாற்றப்படும் திருப்பாவை பட்டு
x

30 திருப்பாவை பாடல்களுடன் அச்சிடப்பட்ட ஊதா நிற பட்டுப்புடவை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டாள் பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சிறப்புகள் ஏராளம். பெரியாழ்வார் மட்டுமின்றி, ஆண்டாளும் ஆழ்வார்களில் ஒருவராக போற்றப்படுகிறார். பெருமாள் மீது கொண்ட காதலால், அவர் நினைவாக பாடிய 30 பாடல்கள், திருப்பாவையாக மிளிர்கின்றன.

ஆண்டாளுக்கு 'கோதை', 'நாச்சியார்' என்ற சிறப்பு பெயர்களும் உண்டு. கோதை ஆண்டாள், 'தமிழையும் ஆண்டாள்' என்பது சொல் வழக்கு. ஆண்டாள் பாடிய 30 திருப்பாவை பாடல்களை, எந்த மொழியில் மொழிபெயர்த்து பாடினாலும் கேட்பவருக்கு தமிழில் பாடுவது போன்ற உணர்வு இருக்குமாம்.

திருப்பாவை பாடல்களை இயற்றிய ஆண்டாளுக்கு பெருமை சேர்க்கும் வகையில், நடிகர் ஜெமினி கணேசன் குடும்பத்தினர் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவை பட்டு ஒன்றை ஆண்டாளுக்கு சமர்ப்பித்தனர். அது அரக்கு நிறம் கொண்டது. இந்த புடவையின் சிறப்பு என்னவென்றால், அதில் ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாடல்கள் இருக்கும். இந்த திருப்பாவை பட்டு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டும், அதாவது மார்கழி முதல் தேதியில் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பல லட்ச ரூபாய் செலவில் பக்தர் ஒருவர் சமர்ப்பித்திருந்த, 30 திருப்பாவை பாடல்களுடன் அச்சிடப்பட்ட ஊதா நிற பட்டுப்புடவை ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டுப்புடவையில், ஆண்டாள் முழு உருவத்தையும் பட்டு நூல்களால் சேர்த்துள்ளனர்.

இந்த பட்டுப்புடவையின் நீளம் 18 கெஜம். ஒரு கெஜம் என்பது கிட்டத்தட்ட 3 அடி ஆகும். மிக மெல்லிதாகவும், வேலைப்பாடுடனும் நெய்யப்பட்டு இருக்கும் இந்த புடவையானது, அப்படியே ஆண்டாள் விக்ரகத்துக்கு சாற்றப்பட்டு, அவர் எழுந்தருளும் போது, அவ்வளவு நீளமான பட்டுப்புடவையை எப்படி இவ்வளவு சிறிதாக மடித்து சாற்றினார்கள் என்று ஆச்சரியப்படும் வகையில் இருக்கும்.


Next Story