பருவநிலை பாடம் போதிக்கும் பள்ளிகள்


பருவநிலை பாடம் போதிக்கும் பள்ளிகள்
x

பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை அளிப்பதற்காக பள்ளிகளில் வானிலை நிலையங்களை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

பருவநிலை மாற்றம் நம் வாழ்வில் எப்போதும் இல்லாத அளவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவது, எதிர்காலத்தில் பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இது குறித்த கல்வியை அளிப்பதற்காக பள்ளிகளில் வானிலை நிலையங்களை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதுமையான திட்டத்தை செயல்படுத்தப்போகும் நாட்டின் முதல் மாநிலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இது குறித்து கேரள கல்வி அதிகாரிகள், "மாநிலம் முழுவதும் 258 பள்ளிகளில் வானிலை நிலையங்கள் நிறுவப்படுகின்றன. புவியியலை ஒரு பாடமாகக் கொண்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் தொழிற்கல்வி மேல்நிலைப் பள்ளிகளும் ஆய்வகப் பரிசோதனைக் களங்களாக செயல்படும்.

வானிலை நிலையங்கள் அமைப்பதற்கான கருவிகள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இதில் மழை அளவீடு கருவி, வெப்பமானி, ஈரப் பதம் மற்றும் உலர் நிலை குறித்து அறியும் தெர்மாமீட்டர், அனிமோமீட்டர் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம். இந்தக் கருவிகளில் பதிவாகும் தரவுகளை எடுத்து புத்தகங்களில் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

இதன்மூலம் தங்கள் பள்ளி வளாகத்திலும், சுற்றியுள்ள வானிலை நிகழ்வையும் தினசரி புரிந்துகொள்ள முடியும். பள்ளி வானிலை ஆய்வகங்கள் மூலம் சேகரிக்கப்படும் வானிலை தரவுகளை ஆராய்ச்சி ஆய்வுகள் மற்றும் பிற அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பயன்படுத்தலாம்.

பேரழிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் அறி வியல் ஆய்வுக்கு வானிலை தகவல் அவசியம் என்பதால், இந்தப் பள்ளி கண்காணிப்பு மையங்கள் சமூகத்துக்குப் பெரிய கடமையைச் செய்யும். வானிலையில் ஏற்படும் மாற்றங்களை துல்லியமாக மாணவர்கள் புரிந்துகொள்ளும் அனுபவத்தைத் தருவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாணவர்களிடம் சுற்றுச்சூழல் குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்தை உருவாக்க முடியும். மாணவர்களிடம் ஆராய்ச்சி திறனை வளர்க்கவும் முடியும். மேலும் பருவநிலையின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தவும் இது உதவும்" என்றனர்.


Next Story