இன்று ஆசிரியர்கள் தினம்: சிறப்புகள் என்ன தெரியுமா?


இன்று ஆசிரியர்கள் தினம்: சிறப்புகள் என்ன தெரியுமா?
x
தினத்தந்தி 5 Sep 2023 2:51 AM GMT (Updated: 5 Sep 2023 5:54 AM GMT)

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மாத, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். கடவுளுக்கு முந்தைய இடத்தில் வைத்து குருவை மதிப்பதுதான் நமது வழக்கமாக உள்ளது. ஏனெனில், நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசானாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களை நமக்கு கற்பித்து தனது, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். அத்தகைய ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதியை, நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம்.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். கடந்த 1962ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

யார் இந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்?

தமிழ்நாட்டின் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி ராதாகிருஷ்ணன் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய ராதாகிருஷ்ணன், பி.ஏ பட்டமும், எம்.ஏ பட்டமும் பெற்றவர். சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். இந்து மத இலக்கியங்கள், மேற்கத்திய சிந்தனைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.

1918ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வானார். 1923ஆம் ஆண்டு "இந்தியத் தத்துவம்" என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். 1962 முதல் 1967ஆம் ஆண்டு வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று மத்திய-மாநில அரசு சார்பில் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் மாநில அரசு சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., என்.எஸ்.எஸ்.) தலா 2 பேர் என மொத்தம் 386 சிறந்த ஆசிரியர்கள் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.


Next Story