டிஜிட்டல் திரையும்.. முதுமையும்..!


டிஜிட்டல் திரையும்.. முதுமையும்..!
x

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அத்தியாவசியமானதாகிவிட்டது. ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப், கம்ப்யூட்டர் என பல தளங்களில் அவற்றின் பங்களிப்பு இருக்கிறது. குழந்தைகளும் மின்னணு சாதனங்களில் மூழ்கி கிடக்கும் நிலை உருவாகி விட்டது.

அப்படி அதிக நேரம் டிஜிட்டல் திரைகளை பார்வையிடுவது வயதாகும் செயல் முறையை விரைவுபடுத்திவிடும். இளம் பருவத்திலேயே வயதான தோற்றம் எட்டிப்பார்த்துவிடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.

மின்னணு சாதனங்களுடன் அதிக நேரம் செலவிடுவது பல்வேறு உடல்நலக் கோளாறு களுக்கு வழிவகுத்துவிடும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தகைய கேஜெட்டுகளை அதிகமாக உபயோகிப்பது உடல் பருமன், தூக்கமின்மை, நாள்பட்ட கழுத்து வலி, முதுகு வலி, மனச்சோர்வு, பதற்றம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும்.

எனவே குழந்தைகள் அதிக நேரம் டிஜிட்டல் சாதனங்களை பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. வேண்டுமானால் தினமும் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் கேஜெட்டுகளை பார்வையிடலாம் என்கிறது அந்த ஆய்வு.

'பிரான்டியர்ஸ் இன் ஏஜிங்' இதழில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வு முடிவில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட கேஜெட்களிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான நீல ஒளி வயதாகும் செயல்முறையை துரிதப் படுத்தக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

''டி.வி.க்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள் போன்ற அன்றாட சாதனங்கள் மற்றும் கேஜெட்களில் இருந்து அதிகமாக வெளியேறும் நீல ஒளி கதிர்கள் தோல் மற்றும் கொழுப்பு செல்கள் முதல் நியூரான்கள் வரை உடலில் உள்ள பல்வேறு உயிரணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை கண்டறிந்துள்ளோம்'' என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியரான ஜாட்விகா கீபல்டோவிச்.

ஆராய்ச்சி குழுவின் பரிசோதனைக்கு ஈக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளியேறும் ஒளி ஈக்களை எந்த அளவுக்கு பாதிக்கிறது என்பதை கண்காணித்திருக்கிறார்கள். செல்களின் வளர்ச்சிக்கு வித்திடும் செல்லுலார் மட்டத்தில் ஈக்களுக்கும், மனிதர்களுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் இருப்பதால் ஈக்களை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள்.

ஈக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொண்டு மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை வகைப்படுத்தி இருக்கிறார்கள். முந்தைய ஆய்வுகளில், கேஜெட்டுகளை அதிகம் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உறுதி செய்யப்பட்டது.

நீல ஒளி வளர்சிதை மாற்றத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை ஏற்படுத்துகிறது என் பதையும், விரைவில் வயதான தோற்ற அறிகுறிகளுக்கு வித்திடுவதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.


Next Story