ரக்பி விளையாட்டில் அசத்தும் விவசாயி பிரின்ஸ் கட்ரி


ரக்பி விளையாட்டில் அசத்தும் விவசாயி பிரின்ஸ் கட்ரி
x

இந்தியாவில் மிகவும் பிரபலம் அடையாத விளையாட்டுகளில் ஒன்று ரக்பி விளையாட்டு. அந்த விளையாட்டில் ஆர்வம் காண்பிக்கும் வீரர் ஒருவர் தனது அசாத்திய உடல் கட்டமைப்பு மூலம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறார்.

யார் அந்த இளம் வீரர்?

அரியானா மாநிலத்தில் விளையாட்டு வீரர்களுக்கு புகழ் பெற்ற மாவட்டம் சோனிபட். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் கட்ரி. அவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். இதனால் இவரும் குடும்பத்தினருடன் விவசாயத்தில் அவ்வப்போது ஈடுபடுவார். சிறுவயது முதல் இவருக்கு விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மீது அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தனது சிறுவயதிலேயே தேசிய அளவிலான கபடிப் போட்டியில் இவர் பங்கேற்றார். அதன்பின்னர் ஓராண்டு மல்யுத்த வீரராக பயிற்சி செய்துள்ளார். இதைத் தொடர்ந்து உடற்பயிற்சி தொடர்பான போட்டிகளுக்கு தயாராகியுள்ளார். எனினும் 2010-ம் ஆண்டு இவருடைய வாழ்வில் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.

2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு ரக்பி போட்டியை கட்ரி நேரில் பார்த்துள்ளார். அந்தப் போட்டியில் வீரர்களின் உடல் கட்டமைப்பை பார்த்த அவருக்கு ரக்பி விளையாடும் ஆசை ஏற்பட்டுள்ளது. இதற்காக தனது உடற்பயிற்சியை தீவிரப்படுத்தி, ரக்பி விளையாட்டிற்கு ஏதுவான உடற்பயிற்சிகளைச் செய்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்திய ரக்பி அணியில் இடம்பிடித்துள்ளார். தற்போது 26 வயதாகும் பிரின்ஸ் கட்ரி இதுவரை இந்திய ரக்பி அணிக்காக 25 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அத்துடன் ஹாங்காங் நாட்டில் ஒரு ரக்பி கிளப் அணிக்காகவும் அவர் விளையாடியுள்ளார்.

இவரின் உடற்பயிற்சி வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் மிகவும் பிரபலம். இவர் தினமும் 90 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். அத்துடன் தனது விவசாயப் பணியையும் சிறப்பாகச் செய்து வருகிறார். மேலும், 2018-ம் ஆண்டு இவர் உடற்பயிற்சி தொடர்பான போட்டியில் 2-வது இடத்தைப் பிடித்தும் அசத்தியுள்ளார்.

தன்னம்பிக்கையுடன் உடற்பயிற்சி, விவசாயம், ரக்பி விளையாட்டு ஆகிய அனைத்திலும் 26 வயது இளைஞரான கட்ரி அசத்தி வருகிறார். இவரின் அர்ப்பணிப்பு மற்றும் உடற்பயிற்சி செய்யும் விதம் பலருக்கு ஊக்கமாக அமைந்துள்ளது.


Next Story