வாணி ஜெயராம் - வனப்புக்குரல் ராணி!


வாணி ஜெயராம் - வனப்புக்குரல் ராணி!
x

வாணி ஜெயராம்.... திரையுலகில் கல்வெட்டாகச் செதுக்கப்பட்ட பெயர். 1970-களில் தேனினும் இனிய குரலுக்காகத் தேடப்பட்ட பெயர். அந்த பெயர், தமிழ்த்திரையுலகில் நுழைந்து கோலோச்ச தொடங்கிய காலம் அது.

இசைஞானியைத் தூக்கிக் கொண்டாட வைத்த பாடல்களில் ஒன்று. திசைகளெங்கும் பரவிப்பாய்ந்த வாணியின் தித்திப்பான தேன்குரலில்! அதுவே வாணியை எல்லோராலும் சீராட்ட வைத்தது.

வாணி ஜெயராம்.... திரையுலகில் கல்வெட்டாகச் செதுக்கப்பட்ட பெயர். 1970-களில் தேனினும் இனிய குரலுக்காகத் தேடப்பட்ட பெயர். அந்த பெயர், தமிழ்த்திரையுலகில் நுழைந்து கோலோச்ச தொடங்கிய காலம் அது.

நிலா போன்று வட்டமான முகம். அகன்ற நெற்றியில் அழுத்தமான சிவப்புப் போட்டு. குடும்பப் பாங்கான முகத்தில் குளிர்ச்சியான பார்வை. ஈர்ப்புமிக்க முக பாவம். சினிமா பத்திரிகைகளில் அடிக்கடி ஆர்வத்தோடு திரை ரசிகர்களால் பார்க்கப்பட்ட அவரது படங்கள்.

கே.பாலச்சந்தரின் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் இடம் பெற்ற 'ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்….' சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தது. கவியரசர் கண்ணதாசனின் கரும்பினும் இனிய வரிகள் பாடலை உயிர்ப்புடன் ரசிக்க வைத்தது. ஒவ்வொரு வரியிலும் ஆழமான பொருள். ஒவ்வொரு சொல்லுக்கும் வாணி ஜெயராம் வெளிப்படுத்திய சங்கதி, நெஞ்சை இழுத்துக் கட்டிப்போட்டது. அதே படத்தில் மற்றொரு பாடல் 'கேள்வியின் நாயகனே… உன் கேள்விக்கு பதிலேதையா…' அதுவும் வாணி ஜெயராமின் வண்ணக்குரலில்! திரை அரங்கமே அமைதியாகிக் கேட்ட அற்புதப் பாடல்கள்! வாணி ஜெயராம் ஒரு அற்புத வரவு!

பம்பாயில் வசித்தபோது 1971-ல் வாணிக்கு திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. 'குட்டி' படத்தில் 'போலே ரே பபிஹாரா…' என்ற மென்மையான மெலோடி பாடல். வசந்த் தேசாய் இசையில் குல்சார் எழுதிய அந்த அருமையான பாடல் ஒலித்த திசை நோக்கி இந்தியத் திரையுலகமே திரும்பிப் பார்த்தது. அந்தக் குரலைத் திரும்பத் திரும்பக் கேட்டது. அப்போது போலவே இப்போதும் கேட்கலாம். பின்பு அந்தக்குரல் தென்றலோடு சேர்ந்து சென்னைக்கு குடிபெயர்ந்தது. கோலிவுட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைந்து இடம்பிடித்துக்கொண்டது. தமிழகம் வாரியணைத்து உச்சிமுகர்ந்த குரல் அது.

அந்தக்குரல் பொன்மனச்செம்மலையும் ஈர்த்தது. எம்.ஜி.ஆர் நடித்து 1974-ல் வெளிவந்த 'சிரித்து வாழவேண்டும்' படத்தில் 'பொன்மனச் செம்மலைப் புண்படச் செய்தது யாரோ?' என்ற பாடல் மனக்கவலைக்கு மருந்து போட்டது. இந்த பாடலை வாணி ஜெயராமுடன் இணைந்து பாடியது திரைக்குரல் வித்தகர் டி.எம்.எஸ். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இதமான இசையில் உருவான அந்த பாடல், தமிழகமெங்கும் தவழ்ந்து பூத்தூவியதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. இதே ஆண்டில் வெளியான 'தீர்க்க சுமங்கலி' படத்தில் இவர் பாடிய 'மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ..' என்ற பாடல், அந்தக் கால ஆண்களையும், பெண்களையும் மையல் கொள்ளச் செய்தது.

1981-ல்`பாலைவனச்சோலை' படத்தில் சங்கர்கணேஷ் இசையில் 'மேகமே மேகமே…' பாடல் ஒரு கஜல் (இது ஒரு இசை வடிவம்). இந்தி கஜல் பாடகர்கள் ஜகஜித் சித்ராசிங் பாடிய 'தும் நஹி, ஹம் நஹி' என்ற தனிப்பாடலின் தழுவலாக அமைந்த பாடல் அது. கஜல் பாடலாசிரியர் சயீத் ராஹி எழுதியது.

வடநாட்டில் வயது வேறுபாடின்றி வளைத்துப்போட்டு வலம் வந்த பாடல் அது. சங்கர்கணேஷின் செம்மையான இசையில் அந்தப் பாடலை அப்படியே அள்ளிவிழுங்கி, அதற்கு மேலும் 24 காரட்டில் மெருகேற்றி அட்டகாசமாக இனிமையில் வெளிப்படுத்தியிருப்பார் வாணி. வான்மேகங்களே கூடி வந்து வாழ்த்தும்படி 'மேகமே மேகமே' கொடி கட்டியது.

இடையிடையில் நிறைய வாணி ஜெயராம் பாடல்கள். அத்தனையும் அருமைதான் என்றாலும் 1978-ல் வெளிவந்து ரெக்கார்டை உடைத்த ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது' படத்தில் ஒரு ஒப்பற்ற விருந்து வைத்தார் வாணி. இசைஞானி இளையராஜாவின் இன்பமான இசையில் 'ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது' பட்டிதொட்டியெல்லாம் பரவசப்படுத்தியது.

இசைஞானியைத் தூக்கிக் கொண்டாட வைத்த பாடல்களில் ஒன்று. திசைகளெங்கும் பரவிப்பாய்ந்த வாணியின் தித்திப்பான தேன்குரலில்! அதுவே வாணியை எல்லோராலும் சீராட்ட வைத்தது. 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் 'நானே நானா யாரோதானா' பாடல் வாணிக்கு வண்ண மகுடம் சூட்டியது. இந்தப்பாடலை வாணி மட்டுமே இப்படிப் பாடமுடியும் என்று வாய்விட்டு பாராட்டு வழங்கியவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும்.

வாணி ஜெயராமுக்கு 'சங்கராபரணம்' தெலுங்கு படத்தில் அடித்தது பெரிய யோகம். 1980-ல் சாதனை இயக்குனர் கே.விஸ்வநாத் உருவாக்கிய பிரமாண்டமான சூப்பர்ஹிட் படம் அது. இப்படிப்பட்ட இசைப்படம் என்றால் இருக்கவே இருக்கிறார் திரை இசைத்திலகம் கே.வி. மகாதேவன். அவரது இமாலய இசையில் அத்தனை பாடல்களும் இந்தியாவையே எழுந்து பார்க்க வைத்த படம். எஸ்.பி.பி - வாணி இணைப்பில் "தொரகுனா இதுவண்ட்டி சேவா" தொட்டுதொட்டுத் தழுவியது நெஞ்சை.

எஸ்.பி.பி.யின் குரல் அள்ளிக்கொள்ளும் என்றால், வாணியின் குரல் துள்ளிச்செல்லும். நடிகர் சோமயாஜுலுவுக்கு மூப்பான குரல் வழங்கி எஸ்.பி.பி உள்ளத்தை கொள்ளையடித்துக்கொண்டே இருமும்போது, அங்கே அமுதம்போல் நுழையும் வாணியின் துல்லியமான இனிமை குரல் இதயங்களை இளக வைத்துவிடும்.

அடுத்து 'மானஸ சஞ்சாரரரே' மனதை வருடிச் செல்லும். 'புரோசே வாரெவரு ரா' மீண்டும் எஸ்.பி.பி.யின் இணையில்லா குரலோடு வாணியின் குலவலான கொஞ்சும் குரல் நெஞ்சங்களைத் திருடும்.

அண்மையில், சங்கராபரணம் படத்தை இயக்கிய மாபெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்தும் மறைந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து வாணி என்கிறபோது, அந்த ஒன்றுபட்ட அதிர்வலை அத்தனை வேதனை அளிக்கிறது. இந்த இரட்டை இழப்பு திரை ரசிகர்களுக்கு மீளாத் துயரம். நினைவலைகள்தான் முடிவதில்லையே! நினைத்திருப்போமாக!


Next Story