வித்யாஸ்ரீ: தன்னம்பிக்'கை'யின் புது அடையாளம்..!


வித்யாஸ்ரீ: தன்னம்பிக்கையின் புது அடையாளம்..!
x

கை, கால்கள் நன்றாக இருந்தும், உடல் ஆரோக்கியமாக இருந்தும் உழைத்து வாழாத சில மனிதர்கள் மத்தியில் 2 கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் கால்களின் துணை கொண்டு பெண் ஒருவர் முன்னேறியுள்ளார். அவர் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவதில் இருந்து ஆண்ட்ராய்டு போனை இயக்குவது வரை தனது அன்றாட வேலைகள் அத்தனையையும் தனது கால்களால் லாவகமாக செய்து வருகிறார். இரண்டு கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்‘கை’ ஒன்றை வைத்து மட்டுமே சாதனை படைத்து வரும் மாற்றுத்திறனாளி பெண்ணை பற்றி அறிந்து கொள்வோம்...

விழுப்புரம் மாவட்டம் காணையை அடுத்த ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவருடைய மனைவி பழனியம்மாள். இந்த தம்பதியினருக்கு முதல் பெண் குழந்தை 2 கைகள் இல்லாமல் விசித்திரமாக பிறந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற் றோர், மனமுடைந்து குழந்தையின் பாட்டி வீரம்மாளிடம் ஒப்படைத்து விட்டனர். மூதாட்டி வீரம்மாள், 2 கைகள் இல்லாமல் பிறந்த பெண் சிசுவை தன்னம்பிக்கையுடன் எடுத்துக்கொண்டு தனது கணவர் ராமருடன் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இலுப்பூரில் வளர்க்க தொடங்கினார்.

''குழந்தையை பார்த்த கிராம மக்கள் சிலர், கைகள் இல்லாமல் பிறந்த இந்த குழந்தையை எப்படி வளர்த்து ஆளாக்க போகிறீர்கள், இந்த பெண் குழந்தை 2 கைகள் இல்லாமல் வளர்ந்து என்ன சாதிக்கப்போகிறது, இப்போதே கருணைக்கொலை செய்து விடலாம் என யோசனை கூறினர். எதையும் நான் காதுகொடுத்து கேட்கவில்லை. அந்த பெண் குழந்தைக்கு வித்யாஸ்ரீ என பெயர் சூட்டி வளர்க்கத்தொடங்கினேன்.

கைகள் இல்லாமல் இருக்கலாம். கால்கள் இருக்கிறது அல்லவா, அதை பயன்படுத்த கற்றுக்கொடுத்தேன். அவளை குளிப்பாட்டுவது, உடைகளை மாற்ற உதவுவது, பள்ளிக்கு அழைத்து செல்வது போன்ற பணிகளை, மகிழ்ச்சியுடன் செய்தேன்'' என்று பொறுப்பாக பேசும் வித்யா ஸ்ரீயின் பாட்டி வீரம்மாள், அவரை போராடி பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

''ஒருகட்டத்தில், சராசரியாக ஒரு மனிதன் 2 கைகளை கொண்டு என்னென்ன செய்வாரோ அதனை வித்யாஸ்ரீ தனது ஒரு காலை வைத்து அனைத்து வேலைகளையும் செய்யத்தொடங்கினார். 5 வயது எட்டியவுடன் வித்யாஸ்ரீயை எங்கள் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் சேர்க்க முயற்சி செய்தேன். அப்போது 2 கைகள் இல்லாத பெண் குழந்தையை இந்த பள்ளியில் சேர்க்க முடியாது என தலைமை ஆசிரியர் மறுத்து திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சித்தேன். கைகள் இருக்கும் குழந்தைகளே சரியாக படிக்காத நிலையில் கைகள் இல்லாத உங்களுடையே பேத்தி எப்படி புத்தகங்களை பிரித்து படித்து எழுதுவார் என கேள்வி எழுப்பினார். அந்த கேள்வி, என் மனதில் ஆழமாக பதிந்தது'' என்று தன்னுடைய மனவேதனையை பகிர்ந்து கொள்ளும் வீரம்மாளுக்கு அதே பள்ளியில் ஆசிரியர் சதீஷ்குமார் என்பவரின் உதவி கிடைத்தது. இருவரும், வித்யாஸ்ரீயை இயல்பான மாணவியாக மாற்ற முயற்சித்தனர்.

''சதீஷ்குமாரின் உதவியால், எனது பேத்தியை, 1-ம் வகுப்பில் சேர்த்தேன். பள்ளி வகுப்பறையில் அனைத்து மாணவர்களும் கைகளால் எழுதியபோது பேத்தி வித்யாஸ்ரீ மட்டும் தனது வலதுகாலில் பென்சில் பிடிக்க தொடங்கினாள். வலது காலால் மெல்ல, மெல்ல எழுத பழகிக்கொண்டு நன்கு படிக்கவும் தொடங்கினாள். தனது கால்களையே கைகளாக மாற்றிக்கொண்டு எழுதுவதற்கும், படிப்பதற்கும் பயன்படுத்தினாள். 1-ம் வகுப்பில் இருந்து படிப்படியாக முன்னேறி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் கால்களை கொண்டு எழுதி முடித்தாள். அந்த தேர்வில், 500 மதிப்பெண்ணுக்கு 329 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதோடு, அவளை ஏளனமாக பார்த்தவர்களை எல்லாம் ஆச்சரியப்பட வைத்தாள். சக மாணவ-மாணவிகளின் பாராட்டுதலையும், ஆசிரியர்களின் பாராட்டுதலையும் பெற்று 12-ம் வகுப்புக்கு முன்னேறினாள். பிளஸ்-2 விலும், அவளுக்கு நல்ல மதிப்பெண் கிடைத்தது. ஆம்...! கால்களால் தேர்வு எழுதி 1200 மதிப்பெண்ணுக்கு 744 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றாள். இவள் சிறப்பு குழந்தை என்பதால், தேர்வில் கூடுதலாக ஒரு மணிநேரம் வழங்கப்படும். அதை சிறப்பாக பயன்படுத்தி, பொறுமையாக கால்கள் வழியே எழுதி தேர்ச்சி பெற்றாள்'' என்று ஆனந்த கண்ணீர் சிந்தும் வீரம்மாள், வைராக்கியத்துடன் இருந்து தனது பேத்தியை எம்.ஏ., பி.எட். வரை படிக்க வைத்துவிட்டார்.




இதற்கு, வித்யாஸ்ரீயின் பெற்றோரும் உறுதுணையாக இருந்துள்ளனர். ஆம்..! 8-ம் வகுப்பு வரை உளுந்தூர்பேட்டை அருகே இலுப்பூரில் படித்த வித்யாஸ்ரீ, 9-ம் வகுப்பு முதல் ஆற்காட்டில் உள்ள தனது தாயின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து மேல்படிப்பை தொடர்ந்திருக்கிறார்.

உலகம் புரியும் வயதிற்கு பிறகு வித்யாஸ்ரீயே, தன்னுடைய வாழ்க்கையை கட்டமைக்க தொடங்கினார். அதுபற்றி அவர் கூறுகிறார்.

''ஆசிரியராகும் கனவில் எனது மேல்படிப்பை தொடர்ந்தேன். திருக்கோவிலூரில் பி.ஏ. ஆங்கிலம் படித்து எனது கால்கள் வழியே தேர்வுகளை எழுதினேன். அதில் தேர்ச்சி பெற்று கண்டாச்சிபுரம் பகுதியில் பி.எட். படித்து பின்னர் விழுப்புரத்தில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து முடித்தேன்.

எனக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் அதிகம். கால்களை பயன்படுத்தி, ஓவியமும் வரைகிறேன். எல்லோரும் அதை ஆச்சரியமாக பார்க்கிறார்கள். ஆனால் எனக்கு அது இயல்பாகவே தெரிகிறது. ஏனெனில் நான் கால்களை பயன்படுத்தி, பல் துலக்குவது, டீ குடிப்பது, சாப்பிடுவது, பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது, முகத்தை அலங்காரம் செய்துகொள்வது, பொட்டு வைப்பது, முகத்தை துடைத்துக்கொள்வது, ஆண்ட்ராய்டு போனை கால் விரல் நுனியில் இயக்குவது, புத்தகப்பையில் இருந்து கால் விரல்களின் மூலம் ஜிப்பை திறந்து புத்தகங்களை எடுத்து விரல்களால் திருப்பி படிப்பது... என பல பணிகளை செய்கிறேன். நான் நினைப்பதை செய்யும் அளவிற்கு கால்கள் எனக்கு ரொம்பவே பழகிவிட்டன'' என்பவர், சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்றுக்கொடுக்கிறார்.

5 பெண்களில் மூத்த மகளாக பிறந்திருக்கும் வித்யாஸ்ரீ, 2 கைகள் இல்லாத நிலையிலும் அந்த குடும்பத்தில் அதிகம் படித்தவர் என்பது பெருமைக்குரிய விஷயம். படித்து முடித்து வேலை இல்லாமல் இருந்தபோது, விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகனிடம், தனக்கு வேலை கேட்டு மனு அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தொழிற்சார் சமூக வல்லுனர் பணியை தற்காலிகமாக செய்து வருகிறார்.

தன்னைப்போலவே தன்னம்பிக்கை மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதை தனது லட்சியமாக கொண்டிருக்கும் வித்யாஸ்ரீ, ஆசிரியர் பணிக்காக காத்திருக்கிறார். அதை தனது லட்சியமாக, ஏற்று தன்னம்பிக்கையுடன் நகர்ந்து வருகிறார். ''இரண்டு கைகள் இல்லை என என்னை ஒதுக்க வேண்டாம். எனக்கு ஒரு வேலைவாய்ப்பை தாருங்கள், நிச்சயம் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து காட்டுவேன்'' என தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நான் கால்களை பயன்படுத்தி,

பல் துலக்குவது, டீ குடிப்பது, சாப்பிடுவது, பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது, முகத்தை அலங்காரம் செய்துகொள்வது, ஆண்ட்ராய்ட் போனை எனது கால் விரல் நுனியில் இயக்குவது... என பல பணிகளை செய்கிறேன். நான் நினைப்பதை செய்யும் அளவிற்கு கால்கள் எனக்கு ரொம்பவே பழகிவிட்டன


Next Story