வாட்ஸ் அப்பில் 19 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளுக்கு தடை!


வாட்ஸ் அப்பில் 19 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளுக்கு தடை!
x

கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 19 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

மே மாதத்தில் 19 லட்சத்திற்கும் அதிகமான இந்திய கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளது. கடந்த மே மாதத்தில் மட்டும் சுமார் 19 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளை வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்துள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த பயனர்கள் விதிகளை மீறிய காரணத்திற்காக தடையை எதிர்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகள் 2021, கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது முதல் 50 லட்சம் பயனர்களை கொண்ட டிஜிட்டல் தளங்கள், தங்களுக்கு கிடைத்த புகார்களின் விவரம் மற்றும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாதாந்திர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் வாட்ஸ்அப் தாக்கல் செய்துள்ள அண்மைய அறிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில் மே 1 முதல் மே 31, 2022 வரை தங்களது பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், பின்னூட்டங்கள் மற்றும் தானியங்கு முறையில் அத்துமீறும் பயனர்களை அடையாளம் கண்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. அதன்படி சுமார் 19.10 லட்சம் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட பயனர் புகார்கள் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் உள்ளன

தங்களது பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்பங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பெரிய சமூக ஊடகங்களில் பரவும் வெறுப்பு பேச்சு, தவறான தகவல் மற்றும் போலிச் செய்திகள் ஆகியவற்றுக்கு எதிராக அந்நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

ஏப்ரல் மாதத்தில் 16 லட்சத்திற்கும் அதிகமான இந்திய பயனர்களின் கணக்குகளையும், மார்ச் மாதத்தில் 18.05 லட்சம் கணக்குகளையும் வாட்ஸ்அப் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.


Next Story