கொதிக்க வைத்த நீர் - வடிகட்டிய நீர்: எது சிறந்தது?


கொதிக்க வைத்த நீர் - வடிகட்டிய நீர்: எது சிறந்தது?
x

உணவு உண்ணாமல் கூட வாரக்கணக்கில் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் தண்ணீர் பருகாமல் ஒரு சில நாட்கள் மட்டுமே வாழ முடியும் என்பார்கள். ஏனெனில் மனித உடல் சுமார் 60 சதவீதம் நீரால் ஆனது. போதுமான அளவு தண்ணீர் உட் கொள்ளாவிட்டால் நீரிழப்பு ஏற்பட்டு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவதிப்பட நேரிடும்.

உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு சுத்தமான நீரை பருகுவதும் அவசியமானது. ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சுத்தமான நீர் கிடைப்பது சவாலாக உள்ளது. வடிகட்டிய, சுத்திகரிக்கப்பட்ட நீரை பருக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. மழைக் காலங்களில் மஞ்சள் காமாலை, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற தண்ணீரால் பரவும் நோய் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த சமயத்தில் கொதிக்க வைத்த நீரை பருகுமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குழாய் நீர் ஆரோக்கியமானதா?

ஏரி, ஆறு, அணை போன்ற நீர் நிலைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு குழாய்கள் வழியாக வீடு களுக்கு வழங்கப்படுகிறது. அந்த தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும் தண்ணீர் மாசுபடுவதை தடுக்க சில சமயங்களில் குளோரின், புளோரைடு போன்றவை கலக்கப் படுகின்றன. அப்படி தண்ணீர் சுத்தம் செய்யப்பட்டாலும் குழாய்கள் தூய்மையாக இல்லாவிட்டால் அந்த தண்ணீரை அப்படியே பருகுவதில் பயனில்லை. குழாய்களில் அழுக்கு படிந்திருந்தால் ஒவ்வொரு நாளும் அழுக்கு தண்ணீரை பருகுகிறீர்கள் எனபதை நினைவில் கொள்ளுங்கள்.

தண்ணீரை ஏன் கொதிக்க வைக்க வேண்டும்?

பாதுகாப்பான மற்றும் சுத்தமான குடிநீரை பெறுவதற்கு கொதிக்க வைக்கும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கிறது. நீரை கொதிக்க வைப்பதன் நோக்கம் அதில் இருக்கும் கிருமிகளை அழிப்பதுதான். தண்ணீரை கொதிக்க வைக்கும் போது, அதிக வெப்பநிலைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நுண்ணுயிரிகள் அழிந்து போய்விடும்.

20 நிமிடங்கள் கொதிக்க வேண்டும்:

நிறைய பேர் தண்ணீரை ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வரைதான் கொதிக்க வைப்பார்கள். சிலர் கொதிக்க தொடங்கியதும் அடுப்பை அணைத்துவிடுவார்கள். அவ்வாறு செய்தாலே நீரில் இருக்கும் அசுத்தங்கள், நுண்ணுயிர்கள், ரசாயனங்கள் நீங்கிவிடும் என்று நினைத்தால் அது தவறானது. நீரில் பரவும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் கிருமி களைக் கொல்ல குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது தண்ணீரை தொடர்ந்து கொதிக்க வைக்க வேண்டும். அதை விட குறைவான நேரம் கொதிக்க வைத்தால், அந்த தண்ணீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல. குறைவான நேரம் கொதிக்கும் நீர் பாக்டீரியாவை மட்டுமே அகற்றும். குளோரின் போன்ற தீங்கு விளைவிக்கும் சேர்மங்கள் மற்றும் குழாய் நீரில் இருக்கும் அசுத்தங்களை அகற்றாது.

வடிகட்டிய நீர் ஆரோக்கியமானதா?

கொதிக்க வைத்த தண்ணீரை விட வடிகட்டிய நீர் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. வடிகட்டிகள் குழாய் நீரில் இருக்கும் அசுத்தங்கள், ரசாயனங்கள் மற்றும் நுண்ணுயிரிகளை அகற்ற உதவும். ஆர்.ஓ., யூ.வி. போன்ற சுத்திகரிப்பான்கள் தண்ணீரைச் சுத்திகரித்து குடிப்பதற்கு உதவும் தொழில் நுட்பங்களை கொண்டிருக்கின்றன.

சுத்தமான நீரை குடிப்பது ஏன் முக்கியம்?

சுத்தமான நீரை பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கும். ஏனெனில் சுத்தமான நீரில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றம் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடல் எடை குறைவதற்கும் உதவும்.

வடிகட்டப்படாத தண்ணீரை ஏன் குடிக்கக்கூடாது?

ஆய்வுகளின்படி, வடிகட்டப்படாத நீர் அல்லது சுத்திகரிக்கப்படாத நீரில் ஜியார்டியா லாம்ப்லியா, கிரிப்டோஸ்போரிடியம் மற்றும் விப்ரியோ காலரா போன்ற ஆபத்தான நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இந்த நுண்ணுயிரிகள் வயிற்றுப்போக்கு, காலரா போன்ற ஆபத்தான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


Next Story