நவராத்திரிவிழாவில் சுண்டல் ஏன் பிரசித்தம்


நவராத்திரிவிழாவில் சுண்டல் ஏன் பிரசித்தம்
x

உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெறுவதற்கும் புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த சுண்டல் படைத்து பிரசாதமாக அளிக்கப் படுகிறது.

மனோ பலம், செல்வ பெருக்கம் மற்றும் கல்வி, கலைகளில் உயர்வு அடைவதற்காக நவராத்ரி விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் சிறப்பே கொலு தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சுண்டல் சமைத்து இறை பாடல்கள் பாடி அம்பிகைக்கு படைத்தது கொலு பார்க்க வருபவர்களுக்கு பிரசாதமாக கொடுப்பது வழக்கம். வகை வகையாக சுண்டல் படைப்பதில் அறிவியல் சூட்சமம் உள்ளது. அவற்றை இப்போது காண்போம்.

சூரியனின் பயணத்தை பொறுத்து ஓர் ஆண்டை இரண்டு பாகமாக பிரிக்கலாம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை சூரியன் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும். தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும். சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் போது குளிர், மழை காலமாக இருக்கும், வடக்கு நோக்கி பயணிக்கும் போது வெயில் மிகுதியாக இருக்கும்.

நவராத்திரி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் காலம் இது. குளிர் காலம், அதை தொடர்ந்து மழைக்காலம் துவங்கும். நோய்கள் பரவும் காலமிது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும் மற்றும் சோம்பல் மிகுதியாக இருக்கும். நம் தோல் குளிரை தாங்கும் ஆற்றல் பெறுவதற்கும் உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெறுவதற்கும் புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த சுண்டல் படைத்து பிரசாதமாக அளிக்கப் படுகிறது. அடுத்து வரும் மழை காலத்தை எதிர் கொள்ள உடலுக்கு தேவையான ஊட்டசத்தும் அளிக்கிறது. மிக எளிதில் சமைக்கக் கூடிய உணவு வகை சுண்டலாகும்.

முதல் நாள் வெள்ளை கொண்டைக் கடலை சுண்டல்.

இரண்டாவது நாள் பயத்தம் பருப்பு சுண்டல்.

மூன்றாவது நாள் மொச்சை சுண்டல்.

நான்காவது நாள் பச்சை பட்டாணி சுண்டல்.

ஐந்தாவது நாள் வேர்க்கடலை சுண்டல்.

ஆறாவது நாள் கடலை பருப்பு சுண்டல்.

ஏழாவது நாள் வெள்ளை பட்டாணி சுண்டல்.

எட்டாவது நாள் காராமணி சுண்டல்.

ஒன்பதாவது நாள் சாதா கொண்டை கடலை சுண்டல்.

இயற்கையோடு இயைந்து வாழும் கலையை இறை வழிபாட்டோடு இணைத்து வைத்துள்ளார்கள். நவராத்திரி திருவிழாவை சிறப்பாக கொண்டாடி உடல் நலத்தோடு வாழ்வோம்.


Next Story