தாடி வைத்த மாடல் மங்கை

முகத்தில் தாடி வளர்ப்பது மாடல் மங்கை டகோடாவுக்கு எளிதான விஷயமாக இருக்கவில்லை. தாடியை வளர்ப்பதில் ஏராளமான சிரமங்களை அனுபவித்தார்.
பெண்கள் முக அழகை பராமரிக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. அவர்களின் ஆடை, அழகு, அலங்காரம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. ஆனால் ஆண்கள் விஷயத்தில் அத்தகைய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. ஆண்கள் தலைமுடியை எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம், எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் தாடி வளர்க்கலாம். ஆனால் பெண்களின் உடலில் முடி சற்று மாறுபட்டு காட்சி அளித்தால் அது அசிங்கமானதாக கருதப்படுகிறது.
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக சில பெண்கள் உடலில் தேவையற்ற முடிகள் வளர்கின்றன. அவற்றை நீக்குவதற்கு ரொம்பவே சிரமப்படுகிறார்கள். அப்படி அவதிப்பட்ட பெண் ஒருவர், அந்த முடியையே தனக்கான அங்கீகாரமாக மாற்றிவிட்டார். முகத்தில் வளர்ந்த முடியை தாடியாக அலங்கரித்து மாடலிங் அழகியாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த அந்த பெண்மணியின் பெயர், டகோடா குக். 30 வயதாகும் இவர், 13 வயது முதல் முடி பிரச்சினையால் அவஸ்தைகளை அனுபவித்திருக்கிறார். முகத்தில் அசாதாரணமாக வளர்ந்த முடியை நீக்கி வந்திருக்கிறார். ஆனால் அதன் வளர்ச்சி அதிகரிக்கவே தினமும் இரண்டு முறை ஷேவிங் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆனால் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்தமுடியவில்லை. காலப்போக்கில் அதனை ஏற்றுக்கொள்ள பழகிவிட்டார். 2015-ம் ஆண்டு டகோடாவின் நண்பர், சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் தாடி வைத்த பெண்ணாக நடிப்பதற்கு அணுகி இருக்கிறார். அதன் பிறகு முகத்தில் முடியை நீக்கும் முடிவை கைவிட்டுவிட்டார். அதுவே நியூயார்க் பேஷன் வீக்கில் மாடலாகும் வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்துவிட்டது.
''நான் நியூயார்க் பேஷன் வீக்கில் நடந்தேன். அது நாள் வரை நான் என் உடலை வெறுத்து வளர்ந்தேன். நான் ஒரு மாடலாக இருக்க முடியாது என்று நினைத்தேன். அது தவறு என்பதை உணர்ந்துவிட்டேன். மாடலிங் அழகியாக போஸ் கொடுத்தபடி நடப்பதற்காக அற்புதமான ஆடையை தேர்வு செய்தேன். அது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. என்னைப் பற்றி நான் விரும்பாத விஷயங்கள் என்னிடம் இன்னும் நிறைய உள்ளன. ஆனால் என் உடல் அந்த விஷயங்களில் ஒன்றாக இருக்காது. இந்த உடல் சில அற்புதமான விஷயங்களைச் செய்துள்ளது. திரைப்படங்கள், அச்சு ஊடகங்கள், பேஷன் ஷோக்கள், டி.வி. மற்றும் பலவற்றில் இடம்பெற வைத்துள்ளது. மேலும் இந்த உடல் என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும்.
என்னுடைய கனவை நனவாக்கியதற்காகவும், எனக்கு கொஞ்சம் கருணை காட்ட உதவியதற்காகவும் நன்றி'' என்கிறார்.
இருப்பினும், முகத்தில் தாடி வளர்ப்பது டகோடாவுக்கு எளிதான விஷயமாக இருக்கவில்லை. தாடியை வளர்ப்பதில் ஏராளமான சிரமங்களை அனுபவித்தார். இறுதியில் அத்தனையையும் ஏற்றுக்கொள்ளப் பழகிவிட்டார். குடும்பத்தினரும் நண்பர்களும் அவருக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.






