சின்ன மாடித்தோட்டத்திலும் சம்பாதிக்கலாம்


சின்ன மாடித்தோட்டத்திலும் சம்பாதிக்கலாம்
x

வேலையிழந்த என்ஜினீயர், மாடித் தோட்டம் அமைத்து செடிகளை விற்பனை செய்து நல்ல வருவாய் ஈட்டிக் கொண்டிருக்கிறார். மலர்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் செடிகள் என தமது வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து பயிரிட்டு அசத்தி வருகிறார், 36 வயது சவ்ரப் திரிபாதி. இவர் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர்.

இது குறித்து சவ்ரப் திரிபாதி கூறும்போது, "சிறு வயது முதலே தோட்டக்கலை எனது பொழுதுபோக்காக இருந்தது. வேலை இழந்ததும் தோட்டம் அமைத்து அதன் மூலம் வருவாய் ஈட்ட முடிவு செய்தேன். அதன் அடிப்படையில்தான் மாடித் தோட்டம் அமைத்தேன். இதில் மலர்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்து வருகிறேன். அதோடு, செடிகள், காய்கறி விதைகள், பழங்கள், மலர்கள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறேன். பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மாடித் தோட்டத்தை வணிகமாக மாற்றியுள்ளேன்.

500 சதுர அடி கொண்ட மாடியில் தக்காளி, மிளகாய், கத்திரி உள்ளிட்டவற்றை பயிரிட்டுள்ளேன். விற்பனை செய்தது போக என் சொந்த பயன்பாட்டுக்கும் இதிலிருந்து எடுத்துக் கொள்கிறேன். இன்றைக்கு 5 நட்சத்திர ஓட்டல்களில் தோட்டம் அமைப்பதற்கான வடிவமைப்பை வழங்கி வருகிறேன்.

பெரிய அளவில் தோட்டம் உருவாக்குவதற்கு முன்பு, உங்கள் வீட்டில் சிறிய இடத்தில் தோட்டம் அமைத்தால் நிறைய அனுபவங்களை பெறலாம். பீகார், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விதைகள், செடிகள் ஆகியவற்றை சேகரித்தேன்.

இதற்காக நான் மேற்கொண்ட பயணம் விவசாயம் குறித்த பல விஷயங்களை எனக்கு கற்பித்தது. இயற்கை விவசாயம் மூலம் கிடைக்கும் காய்கறி மற்றும் பழங்களால் ஏற்படும் நன்மைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்" என்றார்.


Next Story