எப்போதும் லாபம் பெற எலுமிச்சை பயிரிடலாம்


எப்போதும் லாபம் பெற எலுமிச்சை பயிரிடலாம்
x

மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு துறைகளில் அதிக அளவில் தேவை இருப்பதால் எலுமிச்சைக்கு எப்போதும் நல்ல விலை கிடைக்கிறது. எலுமிச்சை சாகுபடியில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை லாபம் பெற முடியும் என்கிறார்கள் அனுபவ விவசாயிகள்.

சரியான மண்

வண்டல் கலந்த செம்மண் நிலத்தில் எலுமிச்சை செழிப்பாக வளரும். நிலத்தில் நாட்டு ரகத்தையும், ஒட்டு ரகத்தையும் கலந்து நடவு செய்யலாம். நடவில் செடிக்கு செடி 12 முதல் 15 அடி இடைவெளி இருக்க வேண்டும். நாட்டு ரகம் 4-வது ஆண்டிலும், ஒட்டு ரகம் 2-வது ஆண்டிலும் காய்ப்புக்கு வரும். செடிகளின் வளரும் பருவத்தில் எலுமிச்சை செடிகளுக்கு இயற்கை உரங்களாக ஆட்டு சாணம், மாட்டு சாணம், மண்புழு உரம் மற்றும் மக்கிய உரங்களை பயன்படுத்தும் போது காய்களின் நிறம் மற்றும் மணம் உயர்வாக இருக்கும். செடிகளுக்கு மண்ணின் நீர்பிடிப்பு தன்மையை பொறுத்து 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

இலை புள்ளி நோய்

செடிகள் காய் பிடிக்கிற நிலையில் இலைச்சுருட்டு புழு மற்றும் இலைப்புள்ளி நோய் பாதிப்பு ஏற்படலாம். இவற்றை தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த பரிந்துரைப்படி மருந்துகளை கலந்து தெளிக்கலாம். காய்கள் பிடித்துவிட்ட பிறகு எந்த பிரச்சினையும் இருக்காது. காய்ப்புக்கு வந்த பிறகு ஆண்டு முழுவதும் பலன் தரும். பழமாக மாறிய நிலையில் செடியில் இருந்து அவை தானாகவே உதிர தொடங்கும். இவற்றை காலையிலேயே சேகரித்து விட வேண்டும். எலுமிச்சையில் கூடுதல் வருமானத்திற்கு ஊடுபயிராக வெங்காயம், வேர்க்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.

நல்ல லாபம்

எலுமிச்சைக்கு சந்தையில் எப்போதும் லாபகரமான விலை கிடைக்கிறது. சில நேரங்களில் அதிக விலையும் கிடைக்கும். மழைக்காலங்களில் மட்டும் சிறிது மந்த நிலை காணப்படும். எலுமிச்சை பழங்களில் ஊறுகாய், ஜுஸ் வகை மற்றும் வேறு சில பதப்படுத்தப்பட்ட பொருட்களை தயாரிக்க முடியும். எலுமிச்சை ஊறுகாய் ஆண்டு முழுவதும் விற்பனை செய்யக்கூடிய உணவு பொருளாகும். இதன் மூலம் எலுமிச்சையை நேரடியாக விற்பனை செய்வதை விட கூடுதல் விலை கிடைக்கும். புதிதாக விவசாய நிலம் வாங்குபவர்களுக்கு எலுமிச்சை சாகுபடி நல்ல லாபம் தருவதாக அமையும்.


Next Story