1.87 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற புத்தக வாசிப்பு திருவிழா
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளில் 1 லட்சத்து 87 ஆயிரம் மாணவ- மாணவிகள் பங்கேற்ற புத்தக வாசிப்பு திருவிழாவை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.
புத்தக வாசிப்பு திருவிழா
தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது. இதை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தர்மபுரி வாசிக்கிறது என்னும் புத்தக வாசிப்பு திருவிழா நேற்று நடைபெற்றது.
தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற புத்தக வாசிப்பு திருவிழாவில் கலெக்டர் சாந்தி கலந்துகொண்டு, 2020-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருது பெற்ற மரப்பாச்சி சொன்ன ரகசியம் என்ற புத்தகத்தை 2 ஆயிரம் மாணவிகளுக்கு வழங்கி தர்மபுரி வாசிக்கிறது திருவிழாவை தொடங்கி வைத்தார்.
உயர்ந்த நிலை
அப்போது கலெக்டர் சாந்தி பேசியதாவது:-
தர்மபுரி வாசிக்கிறது என்னும் மாபெரும் புத்தக வாசிப்பு திருவிழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. மாவட்டம் முழுவதும் உள்ள மாணவ, மாணவிகள் சிறந்த கல்வியை கற்று, வாழ்க்கையில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும். உயர் கல்வியை கற்று, உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்ற தன்னம்பிக்கையை பள்ளிகளில் படிக்கும் பருவத்திலேயே நீங்கள் மனதில் நன்றாக பதிய வைத்து கொள்ள வேண்டும். இளமையில் கற்ற கல்வி எப்பொழுதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். இங்கு படிக்கும் மாணவிகள் எதிர்காலத்தில் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட ஏராளமான உயர் பதவிகளுக்கு செல்லவேண்டும். இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.
1 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள்
தர்மபுரி மாவட்டத்தில் 1610-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 1 லட்சத்து 87 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்த வாசிப்பு திருவிழாவில் கலந்துகொண்டு பல்வேறு வகையான புத்தகங்களை நேற்று காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆர்வத்துடன் வாசித்தனர்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தாசில்தார் ராஜராஜன், தகடூர் புத்தக பேரவை செயலாளர் டாக்டர் செந்தில், தலைவர் சிசுபாலன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, நிர்வாகிகள் கார்த்திகேயன், பொறுப்பாளர்கள் ராஜசேகரன், ரேணுகா தேவி, அறிவுடைநம்பி, புத்தக ஆசிரியர் பாலபாரதி மற்றும் தலைமையாசிரியை தெரசாள் ஆசிரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.