பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து
ஓசூரில் பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின.
ஓசூர்
பட்டாசு கடையில் தீ
ஓசூரில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே வைஷ்ணவி நகர் பிரதான சாலையில் ஏராளமான பட்டாசு கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு, வடிவேல் என்பவர் பட்டாசு கடை வைத்துள்ளார். உரிமம் பெற்று நடத்தப்பட்டு வரும் இந்த கடையில், சுமார் 1,500 கிலோ வரை இருப்பு வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில், வடிவேலு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த பகுதி புகை மண்டலமாக காணப்பட்டது. இதுகுறித்து அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
போராடி தீயை அணைத்தனர்
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த பட்டாசு கடையை சுற்றிலும் குடியிருப்புகள் மற்றும் உணவகங்கள், தேநீர் கடைகள், தனியார் மருத்துவமனை உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும். தீ விபத்து அதிகாலையில் நடந்ததால், அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மின் கசிவு
மேலும் சேதமதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இந்த விபத்து காரணமாக, போலீசார் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.