விழுப்புரம் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.11¼ லட்சம் பறிமுதல் ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை


விழுப்புரம்  பஸ் நிலையத்தில் வாலிபரிடம் ரூ.11¼ லட்சம் பறிமுதல்  ஹவாலா பணமா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:45 PM GMT)

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபரிடம் இருந:து ரூ.11¼ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பணம் ஹவாலா பணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கி படித்து வரும் மற்றும் வேலை செய்து வருபவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பஸ்களில் நேற்று முன்தினம் முதல் புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரேனும் மர்ம நபர்கள், குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

ரூ.11¼ லட்சம் சிக்கியது

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் கட்டுக்கட்டுகளாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் எண்ணிப்பார்த்ததில் ரூ.11 லட்சத்து 22 ஆயிரத்து 500 இருந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவரிடம் துருவி, துருவி விசாரணை செய்ததில் அவர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 34) என்பதும், அவர் வைத்திருந்த பணத்திற்கு உரிய ஆவணம் ஏதும் அவரிடம் இல்லாததும் தெரிந்தது. இதனால் அது ஹவாலா பணமாக இருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர்.

ஹவாலா பணமா?

மேலும் விசாரணையில் இவர் விழுப்புரம் எம்.ஜி.சாலையை சேர்ந்த சுரேஷ் குமார் (43) என்பவரிடம் அவரது மாமனார் கருப்பன், சிங்கப்பூரிலிருந்து அனுப்பும் பணத்தை பல்வேறு நபர்களின் வங்கி கணக்கில் போடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பதும், அவ்வாறு அவர் அனுப்பும் பணத்தை வெள்ளையாக்குவதற்கு இதுபோன்று பண பரிவர்த்தனை செய்ய அருண்குமாரை நியமனம் செய்து அவருக்கு மாதம், மாதம் ஊதியமாக ரூ.25 ஆயிரம் வழங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து உரிய ஆவணமின்றி பணத்தை வைத்திருந்த குற்றத்தின் கீழ் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த பணத்தை மாவட்ட கருவூலத்தில் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், உரிய ஆவணமின்றி கொண்டு வந்த பணத்தை கைப்பற்றி கருவூலத்தில் ஒப்படைத்துள்ளோம். மேலும் வழக்குப்பதிவு செய்த விவரத்தையும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டோம். இனி அவர்கள் நடத்தும் விசாரணையின் முடிவிலேயே அது ஹவாலா பணமா என்ற முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கட்டுக்கட்டுகளாக பணம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story