அரங்கநாதர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே திருவரங்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தந்தார்.
பின்னர் அவர் ஆணையாளர் குமரகுருபரன், கலெக்டர் ஷ்ரவன்குமார், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இதில் கோவிலில் ரூ.38 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மடப்பள்ளி பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் அங்கு பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக அமைக்கப்பட்ட தற்காலிக தடுப்பு கட்டைகளை அகற்றிவிட்டு சில்வர் குழாயால் ஆன நிரந்தர தடுப்பு கட்டைகளை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதாக இருந்தால், நன்கொடையாக தான் ரூ.50 லட்சம் தருவதாக அமைச்சரிடம் கூறினார்.
திருப்பணிகள்
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள் குறித்து அறிக்கை தயார் செய்து வழங்கும்படி அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர் அங்கிருந்து அமைச்சர் சேகர்பாபு புறப்பட்டு சென்றார்.
இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் சிவக்குமார், ஷிவாகரன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.பவித்ரா, சங்கராபுரம் தாசில்தார் சரவணன், அறங்காவல் குழு தலைவர் பாலாஜி பூபதி, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர் துரைமுருகன், பாரதிதாசன், பெருமாள், நகர செயலாளர் ஜெய்கணேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன்குமார், வசந்தம்கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.