உயிர் பிழைக்காமல் இருக்க தூக்கில் தொங்கிய இளம்பெண்
A teenage girl hanged to survive
தாய்-மகள் தற்கொலை செய்த சம்பவத்தில் விஷம் குடித்த இளம் பெண், உயிர் பிழைக்காமல் இருப்பதற்காக கைநரம்புகளை அறுத்தும், தூக்குப்போட்டும் துயர முடிவை தேடிக்கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தள்ளது.
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் கூறப்படுவதாவது:-
ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம்
கோவை சூலூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன் (வயது50). தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி பழனியம்மாள் (48), மகள் தீஷ்னா தேவி (25).
கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்த இவர்கள், ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளனர். அதில் நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து பலரும் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் சூலூரில் குடிபெயர்ந்துள்ளனர்.
தாய்-மகள் தற்கொலை
இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த காந்தரூபன் குடும்பத்துடன் விஷம் குடித்தார். இதில் தாய் பழனியம்மாள், மகள் தீஷ்னா தேவி ஆகியோர் இறந்துபோனார்கள். காந்தரூபன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தாய்-மகளின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனை நடைபெற்றது. விஷம் குடித்த தீஷ்னா தேவி நீண்டநேரம் சுயநினைவுடனேயே இருந்துள்ளார்.
கைகளை அறுத்து தூக்குப்போட்டுள்ளார்
இதைத்தொடர்ந்து கைநரம்புகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுவும் முடியாததால் உயிர் பிழைக்காமல் இருக்க, கேபிள் வயரால் கழுத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. தீஷ்னா தேவிக்கு பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். ஆனால் சீட்டு நடத்தி கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து 3 பேரும் தற்கொலை முடிவை எடுத்துள்ளனர்.போலீஸ் விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.