பஞ்சலிங்க அருவியில் குளிக்க தொடர் தடை


பஞ்சலிங்க அருவியில் குளிக்க தொடர் தடை
x

falls

திருப்பூர்

உடுமலை அருகே தொடர் மழை பொழிவு காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளிக்க தொடர் தடை நீடித்து வருகிறது.

பஞ்சலிங்க அருவி

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பத்திற்கு உட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அருவிக்கு குருமலை, குலிப்பட்டி, மேல் குருமலை உள்ளிட்ட பகுதிகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழைக்கு பின்பு குறிப்பிட்ட இடைவெளியில் சாரல் மழையும் பலத்த மழையும் பெய்து வருகிறது. இதனால் அருவியில் கடந்த சில மாதங்களாக நிலையான நீர்வரத்து இருந்து வருகிறது.

இதன் காரணமாக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பக்தர்கள் உற்சாகத்தோடு வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் வனப்பகுதியில் கடந்த ஒரு வார காலமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

அருவியில் குளிக்க தடை

இதனால் அருவியின் நீராதாரங்களில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் பஞ்சலிங்க அருவி இயல்பு நிலைக்கு மாறாக சீற்றத்துடன் காணப்படுகிறது.

மேலும் அவ்வப்போது காட்டாற்று வெள்ளம் பஞ்சலிங்க அருவியையும் அடிவாரப் பகுதியில் மூம்மூர்த்திகள் எழுந்தருளி உள்ள கோவிலையும் சூழ்ந்துவாறு திருமூர்த்தி அணைக்கு சென்ற வண்ணம் உள்ளது. அத்துடன் வானம் மேகமூட்டமாக காணப்படுவதுடன் பலத்த மழை பெய்வதற்கான சூழலும் நிலவுகிறது.

இதனால் பாதுகாப்பு கருதி அருவியில் குளிப்பதற்கு கோவில் நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்து உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளையும் சாமி தரிசனம் செய்து பின்பு சுற்றுலா பயணிகள் திரும்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

மேலும் கோவிலுக்கு செல்லும் நுழைவுப் பகுதியில் பஸ் நிறுத்தத்தின் அருகே போக்குவரத்திற்காக சீரமைக்கப்பட்ட பகுதியில் பெரிய பாறை ஒன்று மண் அரிப்பு காரணமாக சரிந்து விழுந்தது. அதனை பணியாளர்கள் உடைத்து அகற்றினார்கள்.


Related Tags :
Next Story