மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்
Peace talks meeting regarding fishermen staying and fishing
வேதாரண்யம்:
கோடியக்கரையில் வெளிமாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன்பிடிப்பது தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வேதாரண்யம் கோட்டாட்சியர் தலைமையில் நடந்தது.
மீன்பிடி சீசன்
வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.இந்த சீசன் காலத்தில் நாகை, திருவாரூர்,தஞ்சை,மயிலாடுதுறை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன் பிடிப்பார்கள்.
இந்த நிலையில் ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட மீனவர்கள் கோடியக்கரையில் நாகை மாவட்ட மீனவர்கள் மட்டுமே தங்கி மீன்பிடிக்க வேண்டும். வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன்பிடிப்பதால் மீன் வளம் பாதிக்கிறது. இதனால் எங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் நாகை மாவட்ட மீனவர்கள் மட்டும் கோடிக்கரையில் தங்கி மீன் பிடிப்பது என முடிவு செய்யப்பட்டது.
அமைதி பேச்சுவார்த்தை
தற்போது நாகை மாவட்டத்தில் இருந்து மாயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கபட்டதால் அந்த மாவட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன்பிடிக்ககூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆறுகாட்டுதுறை மீனவர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோடியக்கரையில் இருந்து வெளிமாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் வெளியேறும் வரை போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு செய்தனர்.
இதை தொடர்ந்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் மீன் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
நீதிமன்றம் மூலம் தீர்வு
கூட்டத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இங்கு தங்கி இருப்பவர்கள் மீன்பிடித்து கொள்ளலாம் என்றும் அடுத்த ஆண்டு முதல் இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், தற்போது தங்கி உள்ள மீனவர்கள் நாள்தோறும் டோக்கன் வாங்கி மீன் பிடிக்க செல்ல வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மீனவர்கள் நடத்த இருந்த போராட்டம் கைவிடப்பட்டது