ஆனைமலை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி: தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்-முகாமில் வேளாண் அதிகாரி தகவல்
ஆனைமலை அருகே விவசாயிகளுக்கு பயிற்சி: தென்னையில் ஊடுபயிர் சாகுபடி செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும்-முகாமில் வேளாண் அதிகாரி தகவல்
ஆனைமலை
ஆனைமலை வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையால் அட்மா திட்டத்தில் கணபதிபாளையம் கிராமத்தில் தென்னையில் பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. முகாமுக்கு ஊராட்சி தலைவர் கலைவாணி சிலம்பரசன் தலைமை தாங்கினார். தென்னை வளர்ச்சி வாரிய ஆராய்ச்சி உறுப்பினர் ராஜமாணிக்கம் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து, பேசினார். அப்போது தென்னையில் மண் பரிசோதனை, நடவு முறை, ரகம் தேர்வு, சொட்டு நீர்ப்பாசனம் அமைத்தல், மக்கிய தொழு உரம், மண்புழு உரம், ஆடு, கோழி உரம் கலந்த பண்ணை கழிவை ஒரு வருடத்தில் மரத்திற்கு 50 கிலோ இடும் முறை, வேர் வாடல் நோய், ரூகோஸ் வெள்ளை ஈ, கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், தென்னையில் ஊடுபயிராக கோகோ, ஜாதிக்காய், மிளகு, எலுமிச்சை, கொய்யா முருங்கை ஆகியவற்றை உரிய இடைவெளியில் சாகுபடி செய்தால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் பெற வழிவகுக்கும் என்று அவர் தெரிவித்தார். திவான்சாபுதூர் ஊராட்சி கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் 2022-23-ம் ஆண்டில் தேர்வாகியுள்ளதால், தென்னையில் தக்கைப்பூண்டு, போராக்ஸ், உயிர் உரங்கள், விவசாய உபகரணங்கள், விளைபொருள் உலர்த்தவும், பாதுகாக்கவும் பயனாகும் தார்ப்பாய்கள் 50 சதவீதம் மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதேபோல் வயதான மற்றும் நோயுற்ற மரங்களை வெட்டி அகற்றிட தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக மரத்திற்கு ரூ.1000-ம் வழங்க விவசாயிகள் தேர்வு, துறை அலுவலர்களால் தற்போது நடைபெற்று வருவதாக உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.