உயிரைபறிக்கும் 'செல்பி' மோகம்; ஆர்வத்தால் ஆபத்தைத் தேடும் இளைஞர்கள்


உயிரைபறிக்கும் செல்பி மோகம்; ஆர்வத்தால் ஆபத்தைத் தேடும் இளைஞர்கள்
x

ஒரு நேரத்தில் புகைப்படங்கள் எடுக்கும் ‘காமிரா'க்கள் அரிதாக பார்க்கப்பட்டன. புகைப்படக் கலைஞர்கள் பெரிதாக பார்க்கப்பட்டனர். இன்று தொழில்நுட்ப புரட்சியால் செல்போன்கள் வைத்து இருப்பவர்கள் அனைவருமே புகைப் படக்காரர்கள்தான். ஐந்து வயது குழந்தைகூட ஒரு காட்சியை செல்போனில் படம் எடுத்துவிட முடிகிறது. செல்போன்கள் மூலம் படம் எடுக்கிற மோகம் பெரியவர் முதல், சிறியவர் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை.

கரூர்

'செல்பி' மோகம்

அதிலும் செல்போனில் 2 பக்கமும் படம்பிடிக்கிற காமிரா வசதி, என்று வந்ததோ அன்று முதல் சுயமாக நம்மை படம் எடுத்துக்கொள்கிற 'செல்பி' என்கிற மோகம் ஒவ்வொருவரையும் தொற்றிக் கொண்டு விட்டது.

திருமண விழாக்களில் மணமக்களுடன் இணைந்து 'செல்பி', பொது இடங்களில் பிரபலங்களை கண்டுவிட்டால் ஆர்வத்தில் அவர்களுடன் 'செல்பி', சுற்றுலாத்தலங்களுக்கு சென்றால் இயற்கை எழில்மிகு காட்சிகளுடன் 'செல்பி', ஏன்? உயிரிழந்த சடலங்கள் முன்பு இருந்துகூட 'செல்பி' எடுக்கிற அளவில் 'செல்பி' இன்று அதுவும் இளைய தலைமுறையினரை ஆட்டிவித்து வருகிறது.

புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு அதிகம் 'லைக்ஸ்' பெற வேண்டும் என்ற ஆசையில், ஆர்வத்தில் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

உயிருக்கு உலை

இவ்வாறாய் ஓடும் ரெயில் முன்பு, பாறையின் மேல் நின்று, புயல் வெள்ளம் போன்ற இயற்கை சீற்ற காலங்களில் ஆபத்தான இடங்களில் நின்று 'செல்பி' எடுக்க முயன்று பல உயிர்கள் பறிபோய் இருக்கின்றன. இருந்தும் மக்களிடையே 'செல்பி' மோகம் குறைந்தப்பாடில்லை. சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 150 அடி உயர பாறையின் மேல் நின்று மணப்பெண் ஒருவர் 'செல்பி' எடுக்க முயன்றபோது கால் தவறி கல்குவாரி தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். அவரை சினிமா கதாநாயகன் போல் மணமகன் தனது உயிரை துச்சமென நினைத்து கீழே குதித்து காப்பாற்றினார்.

இந்த சம்பவம் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதால் ஏற்படும் விபரீதத்தை எடுத்துக்காட்டும் எச்சரிக்கையாக அமைந்தது.

உயிருக்கு உலை வைக்கும் இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் 'செல்பி' மோகம், இளைஞர்களிடம் குறையுமா? என்பது பற்றிய பல்வேறு தரப்பினரின் கருத்துகள் வருமாறு:-

போதைப் பழக்கம் போன்று...

திரைப்பட நடிகை கஸ்தூரி:- எல்லோரது வாழ்க்கையிலும் செல்போன் இப்போது நீக்கவே முடியாத அங்கமாகிவிட்டது. ஒரு காலத்தில் செல்போன் நம்மிடம் இல்லை. இப்போது செல்போன் இல்லாமல் நாமே இல்லை. செல்போன் இல்லாத காலம் என்பது இனி நினைவில் இருக்கவும் போவதில்லை.

செல்போன் நல்லதா, கெட்டதா? 'செல்பி' என்பது நல்லதா, கெட்டதா? என்பதை யோசிக்கும் காலத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். அது பற்றிய யோசனைகளை கடந்து, தற்போது செல்போனுடன் வாழப்பழகிவிட்டோம். செல்போன் பயன்பாடு என்பதும், 'செல்பி' எடுப்பதும் என்பதும் அவரவர் நாகரிகத்தை பொறுத்த விஷயமாகும்.

'செல்பி' என்ற விஷயம், இப்போது மூச்சுக்காற்று போல் பரவலாகி விட்டது. வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. 'செல்பி' எடுப்பதை தவறு என்று சொல்லவே மாட்டேன். ஆனால் அதன் போக்கு மாறிவிடக்கூடாது. அதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.

மீள முடியாத சோகம்

வெள்ளியணை தாளியாபட்டியை சேர்ந்த கல்லூரி மாணவி சம்யுக்தா:- வரலாற்று சிறப்புமிக்க இடங்கள், நினைவில் நிற்க வேண்டிய இடங்கள், புகழ்பெற்ற மனிதர்களுடன் 'செல்பி' எடுக்கும் போது எந்தவித பிரச்சினையும் எழுவதில்லை. ஆனால் ஆபத்தை உணராமல் ஆர்ப்பரித்து கரைபுரண்டு ஓடும் ஆறு, கடல் மற்றும் உயரமான கட்டிடங்களின் ஓரம் ஆபத்தான முறையில் நின்று 'செல்பி' எடுப்பதும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய விலங்குகள் முன் நின்று இளைஞர்கள் 'செல்பி' எடுக்க முயல்கின்றனர். ஒரு நொடி யோசிக்காமல் இவ்வாறு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி குடும்பத்தாருக்கும் மீள முடியாத சோகத்தை ஏற்படுத்துகிறது. 'செல்பி' எடுத்து ஆபத்தில் சிக்கி கொள்ளும் நபர்கள் குறித்து செய்தி தாள்கள் மூலம் தெரிந்து கொண்டாலும், நமக்கு அவ்வாறு நிகழாது என ஒருவிதமான தைரியத்தில், ஆபத்தான முறையில் 'செல்பி' எடுத்து நண்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டுமென இச்செயலில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். தேவையான இடங்களில் மட்டுமே 'செல்பி' எடுக்க வேண்டும் என்ற சிந்தனை இளைஞர்கள் மனதில் ஏற்பட வேண்டும். அதுதான் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உயிருக்கு உலைவைக்கும் 'செல்பி'

தோகைமலையை சேர்ந்த மாரிமுத்து:- தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வது போன்று 'செல்பி' எடுத்து வருகிறார்கள். இவ்வாறு அதிவேகமாக செல்லும் போது குண்டும், குழிகளில் விழுந்து காயம் அடைந்து வருகிறார்கள். இதேபோல் சில வாலிபர்கள் நீச்சல் தெரியாமல் கிணறு மற்றும் குளத்தின் முன்பு 'செல்பி' எடுத்து வருகிறார்கள். இதில் சிலர் தவறி விழுந்து இறந்தும் உள்ளனர். எனவே உயிருக்கு உலைவைக்கும் 'செல்பி' மோகத்தில் இருந்து இளைய சமுதாயத்தினர் விலகி வரவேண்டும்.

வேதனையாக இருக்கிறது

ஓலப்பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவி கோபிகா:-

'செல்பி மோகம் இன்று எல்லோருக்கும் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக சுற்றுலா தலங்களுக்கு செல்பவர்கள் 'செல்பி' மோகத்தால் தங்களுடைய இன்னுயிரை இழந்து உள்ளனர். இதபோல் ஓடும் ரெயில் முன்பு 'செல்பி' எடுக்க முயன்றவர் பலி. வெள்ளத்தில் 'செல்பி' எடுக்க முயன்ற நபர் நீரில் அடித்து செல்லப்பட்டார் என்று செய்திகள் வரும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனவே ஆபத்தான இடங்களைத் தேடிச்சென்று 'செல்பி' எடுப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

வருவாய் இழப்பு

லாலாபேட்டை அருகே உள்ள கள்ளப்பள்ளியை சேர்ந்த போட்டோகிராபர் சிவா:- கடந்த சில ஆண்டுகளாக செல்போன் மூலம் அனைத்து நிகழ்ச்சிகளையும் செல்போன் மூலம் படமெடுக்கும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் ஒரு நிகழ்ச்சி நடந்தால் போட்டோகிராபர் அழைத்து போட்டோ எடுப்பது வழக்கம். மேலும் குரூப் போட்டோ மற்றும் குழந்தைகளின் பிறந்தநாள் விழாவை கேமராக்கள் மூலம் எடுத்தார்கள். தற்போது குரூப் போட்டோ முதல் திருமணம், காதுக்குத்து என அனைத்து நிகழ்ச்சிகளும் செல்போனில் படம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதனால் எங்களை போன்ற போட்டோகிராபர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. திருமண நிகழ்ச்சியில் மாப்பிள்ளை நண்பர்கள் சிலர் 'செல்பி' எடுக்க ஆரம்பிப்பதால் உறவினர்கள் மற்றும் முதியோர்கள் வாழ்த்து கூற வரிசையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே இளைஞர்களிடையே இந்த பழக்கம் மாறினால் தான் பெரியவர்களுக்கும் மரியாதை, போட்டோ கிராபர்களுக்கும் நிம்மதி.

ஆபத்தான இடங்களில் 'செல்பி'

குளித்தலையை சேர்ந்த கல்லூரி மாணவர் ரெங்கேஷ்குமார்:- செல்போன்களில் முன்பக்க கேமராக்கள் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டதோ அப்போது முதல் 'செல்பி' எடுக்கும் மோகம் பலரிடம் ஏற்பட்டு விட்டது. அதிலும் பள்ளி- கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் 'செல்பி' எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிக லைக் பெறுவதற்காக சிலர் ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுத்து வலைதளங்களில் வெளியிடுகின்றனர். சில நேரங்களில் விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழக்கும் நிலை கூட ஏற்படுகிறது. இது அந்த இளைஞர்களின் குடும்பத்தில் மீளா துயரை ஏற்படுத்தி விடுகிறது. எனவே ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுப்பதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

கரணம் தப்பினால் மரணம்

மண்மங்கலம் பகுதியை சேர்ந்த அரசு மகளிர் கல்லூரி மாணவி பூமிகா:-

'செல்பி' எடுக்கும் பழக்கத்துக்கு இளைய தலைமுறையினர் பலர் அடிமையாகி உள்ளனர். மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு, எல்லோரையும் விடவும் வித்தியாசமாக இருக்க வேண்டும். அனைவரின் பார்வையும் நம் மீது திரும்பி உடனடியாகப் பிரபலமாக வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற செயல்களில் ஆபத்தை உணராமல் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக பஸ் மற்றும் ரெயில் படிக்கட்டில் நின்று கொண்டு 'செல்பி' எடுப்பது போன்ற தவறான பாதையில் சென்று வருகிறார்கள். கரணம் தப்பினால் மரணம் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

தண்டனை விதிக்கப்படுமா?

சினிமா, விளையாட்டு பிரபலங்களிடம் 'செல்பி' மோகம் அதிகம் இருக்கவே செய்கிறது. அதே நேரத்தில் தங்களது அனுமதி இல்லாமல் 'செல்பி' எடுப்பதை விரும்பாத பிரபலங்களும் இருக்கிறார்கள். நடிகர் சிவகுமார் தன்னிடம் 'செல்பி' எடுக்க முயன்ற நபரின் செல்போனை பறித்து வீசிய சம்பவமும் நினைவுக்கூரத்தக்கது.

'செல்பி' மோகத்தால் உயிரிழப்பு சம்பவங்களை தடுக்க ஆபத்தான இடங்களில் 'செல்பி' எடுக்கக் கூடாது என்று அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மீறுபவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கைகளும் விடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

'செல்பி' படம் கண் சிமிட்டியது

முதலில் எப்போது தெரியுமா?

'செல்பி' இன்று, நேற்று அல்ல 183 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், நம்பித்தான் ஆகவேண்டும்! அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா நகரத்தில் பிரபல புகைப்பட ஆர்வலரான ராபர்ட் கார்னெலியஸ் தனது கேமராவில் இருந்து பின்னோக்கி படம் எடுத்தார். இதுதான் உலகிலேயே முதல் 'செல்பி' என்று கருதப்படுகிறது.

அதன் பின்னர் 1990-களில் கிழக்கு ஆசிய நாடுகளில் 'செல்பி' பிரபலமாகியது. 2000 ஆண்டுக்கு பின்னர்தான் இந்தியாவில் பரவலாக 'செல்பி' படம் கண் சிமிட்டியது.

2013-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு அகராதியில் 'செல்பி' என்ற வார்த்தை புதிதாக சேர்க்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச 'செல்பி' தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் இதில் கவனிக்கத்தக்க தகவல் ஆகும்.


Next Story