பொதுமக்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு
உழவர் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பொதுமக்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை குலுக்கல் முறையில் தேர்வு செய்து விவசாயிகள் வழங்குகின்றனர்.
பொள்ளாச்சி
உழவர் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பொதுமக்களுக்கு இலவச காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை குலுக்கல் முறையில் தேர்வு செய்து விவசாயிகள் வழங்குகின்றனர்.
உழவர் சந்தை
பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தைக்கு கோமங்கலம், கோமங்கலம்புதூர், புரவிபாளையம், சங்கம்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தையில் உரிமம் பெற்ற விவசாயிகள் தோட்டங்களில் விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்வதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாங்கி செல்கின்றனர்.
இதற்கிடையில் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் குலுக்கல் முறையில் இலவச காய்கறி தொகுப்பு விவசாயிகளால் வழங்கப்படுகிறது.
காய்கறி தொகுப்பு
இதுகுறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறியதாவது:-
கொரோனா பரவலுக்கு பிறகு உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க வரும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்தது. இதை அதிகரிக்க குலுக்கல் முறையில் பொதுமக்களை தேர்வு செய்து, விவசாயிகளே இலவசமாக காய்கறி தொகுப்பு வழங்கி வருகின்றனர். முதலில் அங்குள்ள பெட்டியில் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை சீட்டில் எழுதி போட வேண்டும். ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமையில் அந்த சீட்டுகளை எடுத்து குலுக்கல் முறையில் ேதர்வு செய்து, காய்கறி தொகுப்பு வழங்கப்படுகிறது. அதில் சுமார் 3 கிலோவில் அனைத்து காய்கறிகளும் இருக்கும்.
இதன் மூலம் உழவர் சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுவரை 25 பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மேலும் புத்தாண்டையொட்டி உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன. இது தவிர 23 விவசாயிகளுக்கு உழவர் சந்தை அடையாள அட்டை வழங்கப்பட்டது. புதிதாக அடையாள அட்டை பெறுவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.