அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட பஸ்கள் விரைவில் இயக்கப்படும்
விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என்று லட்சுமணன் எம்.எல்.ஏ. உறுதி அளித்தாா்.
விழுப்புரம்:
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி கெங்கராம்பாளையம் ஊராட்சி ஜி.கரைமேட்டில் குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசுகையில், ஏற்கனவே கிராமப்புறங்களுக்கு இயக்கப்பட்ட பஸ் சேவைகள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் புதிய பஸ்கள் கொள்முதல் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடி தாமதப்படுத்துகின்றனர். இருப்பினும் ஏற்கனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் கெங்கராம்பாளையம் பகுதியில் பஸ்கள் நிறுத்தவும் அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில் கண்டமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் வாசன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தம், சண்முகம், பொறியாளர் குகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சிவரஞ்சனி, ராஜாமணி, செல்வக்குமரன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யனார், துணைத்தலைவர் கவுரி, நிர்வாகிகள் ராஜசேகர், முனுசாமி, வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் புரூஸ்லி நன்றி கூறினார்.