மேயர்,ஆணையாளரை முற்றுகையிட்டு போராட்டம்


மேயர்,ஆணையாளரை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 15 Feb 2023 12:15 AM IST (Updated: 15 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மேயர்,ஆணையாளரை முற்றுகையிட்டு போராட்டம்

கோயம்புத்தூர்

கோவை

உயர்த்தப்பட்ட கூலி வழங்காததை கண்டித்து மாநகராட்சி மேயர், ஆணையாளர் ஆகியோரை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதி வங்கி மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

இதனால் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மாலைக்குள் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

குறைவாக வழங்கப்பட்ட சம்பளம்

இதற்கிடையே மாலையில் அவர்களுக்கு வங்கி மூலம் சம்பளம் கொடுக்கப்பட்டது. அதில் தினக்கூலியாக ரூ.415 மட்டுமே வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு இருந்தது. அதை பார்த்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அனைவரும் சேர்ந்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

செவ்வாய்க்கிழமை தோறும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என்பதால் அந்த கூட்டத்தில் சென்று முறையிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் நேற்று காலையில் கோவை மாவட்ட தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகம் வந்தனர்.

மேயர், ஆணையாளர் முற்றுகை

அப்போது அங்கு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. உடனே அவர்கள் அங்கு சென்று மேயர் கல்பனா, ஆணையாளர் மு.பிரதாப் ஆகியோரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஏன் எங்களுக்கு உயர்த்தப்பட்ட கூலியை வழங்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு மேயர், ஆணையாளர் ஆகியோர் உயர்த்தப்பட்ட கூலிதான் உங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது என்றும், இ.எஸ்.ஐ மற்றும் பி.எப் பிடித்ததுபோன்று மீதமுள்ள சம்பளம்தான் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது என்றும் கூறினார்கள்.

ஏமாற்றி விட்டனர்

அதற்கு தூய்மை பணியாளர்கள் உயர்த்தப்பட்ட கூலி ரூ.712. ஆனால் வழங்கப்பட்டு இருப்பது ரூ.415 தான். இ.எஸ்.ஐ., பி.எப்.க்கு தினமும் ரூ.297 பிடிக்கப்படுகிறதா என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அதற்கு ஆணையாளர் இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டுவிட்டு கூறுகிறேன் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது, தினக்கூலியாக ரூ.712 வழங்குவதாக கூறி அதிகாரிகள் எங்களை ஏமாற்றிவிட்டனர். எங்களுக்கு ரூ.379 உயர்த்தப்படும் என்று நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் ரூ.79 மட்டும் உயர்த்தி உள்ளனர். எனவே இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.


Next Story