பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வழங்க கோரி மறியல்

அன்னவாசல் அருகே பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வழங்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கும்பாபிஷேகத்திற்கு அனுமதி மறுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே புதூர் கிராமத்தில் பிடாரி அம்மன், கரைய கருப்பர், அடைக்கலம் காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்கள் உள்ளது. இதில் பிடாரி அம்மன் மற்றும் கரைய கருப்பர் ஆகிய கோவில்களுக்கு இன்றும் (திங்கட்கிழமை), அடைக்கலம் காத்தார் மற்றும் பரிவார தெய்வங்களின் கோவில்களுக்கு வருகிற 26-ந்தேதியும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளை அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பையும் அழைத்து 5 முறைக்கு மேல் சமாதான கூட்டம் நடத்தி உள்ளனர். அதில் உடன்பாடு ஏற்படாததால் இன்று நடைபெற இருந்த கும்பாபிஷேக விழாவிற்கு சட்ட ஒழுங்கு பிரச்சினை காரணமாக போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சாலை மறியல்
இதனால் புதூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பு பொதுமக்கள் அதிகாரிகளின் இந்த முடிவை கண்டித்தும், கும்பாபிஷேகம் நடத்த அனுமதி அளிக்க கோரியும் புதுக்கோட்டை- இலுப்பூர் சாலையில் காலாடிப்பட்டி சத்திரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இலுப்பூர் வட்டாட்சியர் ரமேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து சமாதான கூட்டம் நடத்தி அதில் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து உரிய முடிவெடுப்பது என அவர்கள் உறுதி அளித்தனர். அதன் அடிப்படையில் மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை- இலுப்பூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பரபரப்பு
தொடர்ந்து நேற்று இரவு இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்ற பின்னரே கும்பாபிஷேகம் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே கோவிலை சுற்றி 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






