கட்டுமான தொழிலாளர்கள் திடீர் போராட்டம்


கட்டுமான தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:30 AM IST (Updated: 15 Jun 2023 8:15 AM IST)
t-max-icont-min-icon

மங்கலம்பேட்டையில் கட்டுமான தொழிலாளர்கள் திடீர் போராட்டம் நடத்தினர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டை கர்ணத்தம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் வீரன். இவர் வசித்து வரும் இடம் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு சொந்தமானது என கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடந்து வரும் நிலையில் அவரது வீட்டுக்கு மங்கலம்பேட்டை பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் விருத்தாசலம் சார் ஆட்சியர் உத்தரவின்படி நாராயணசாமி மகன் வீரன் என்பவர் பெயரில் பட்டா பெற்றுள்ளதை ரத்து செய்து, அந்த இடத்தை ஆரிய வைசிய சமூகம் என கிராமம் மற்றும் வட்டக் கணக்குகளில் உரிய திருத்தம் செய்து கொள்ளுமாறும், அத்துடன், வருவாய்த் துறை ஆவணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, ஆரிய வைசிய சமூகம் என்ற பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதால் இக் கடிதம் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து 12.6.2023-க்குள் தாங்களாகவே முன்வந்து இடத்தை காலி செய்ய வேண்டும் தவறும் பட்சத்தில் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் அப்புறப்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலம் கடந்தும் பிரச்னைக்குரிய இடத்தில் இருந்து வீரன் காலி செய்யாததால் மங்கலம்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் மயில்வாகனன் தலைமையில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று வீரன் குடும்பத்தினரை காலி செய்யுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வரும் வரை இடத்தை காலி செய்ய முடியாது என கூறி கையில் மண்எண்ணெய் கேனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனே போலீசார் அவர்கள் கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். வீரன் மகன் ராமதுரை கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கத்தில் உறுப்பினராக இருப்பதால், அவருக்கு ஆதரவாக கட்டுமான தொழிலாளர்கள் அங்கு கூடி நின்று கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து வந்த மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டதோடு, வீரன் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story