'சதம்' அடித்த தக்காளி: தொடர்ந்து அதிகரித்து வரும் காய்கறிகள் விலை- வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து
‘சதம்’ அடித்த தக்காளி: தொடர்ந்து அதிகரித்து வரும் காய்கறிகள் விலை- வியாபாரிகள், இல்லத்தரசிகள் கருத்து
நமது உணவு கலாசாரத்தில் காய்கறிகளுக்கு தனி இடம் உண்டு. சைவ சாப்பாடு, அசைவ சாப்பாடு, சைனீஸ் எதுவாக இருந்தாலும் காய்கறிகள் இல்லாமல் சமையலும், சுவையும் முற்று பெறாது.
காய்கறிகள் விலை உயர்வு
வெங்காயம், தக்காளி இல்லாத சமையலை வீடுகளில் மட்டுமல்ல, ஓட்டல்களிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் விலை உயர்ந்தபோது, முட்டை ஆம்லெட்டில் வெங்காயத்துக்கு பதிலாக முட்டைகோசை போட்டு சமாளித்தனர் ஓட்டல்காரர்கள். அதுவே பழகி முட்டைகோஸ் ஆம்லெட் கேட்டு வாங்கி சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். எது எப்படியோ சமையல் என்றால் காய்கறி முக்கிய இடம் பிடித்து விடுகின்றன. எனவே எந்த ஒரு காய்கறி விலை உயர்ந்தாலும் அது குடும்பங்களை பாதிக்கிறது.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு கையில் 100 ரூபாயை கொண்டு சந்தைக்கு சென்றால் ஒரு பை நிறைய பொருட்களை அள்ளிக்கொண்டு வரலாம். 4 பேர் அல்லது 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு ரூ.150 அல்லது ரூ.200-க்கு காய்கறிகள் வாங்கினால் ஒரு வாரத்துக்கு போதுமானதாக இருக்கும். பலர் அதையும் குளிர்சாதன பெட்டியில் வைத்து, அடுத்த வாரம் குப்பையில் போடும் அளவுக்கு காய்கறிகள் மீதமாகி விடும். ஆனால் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து குடும்ப தலைவிகளை கிலி அடையச்செய்தது.
விலையில் 'சதம்' அடித்த தக்காளி
காலை உணவு, மாலை உணவு, மதிய உணவு எதுவாக இருப்பினும் சட்னி, குழம்பு, சாம்பார் என்று அனைத்துக்கும் தக்காளி அவசியம். அப்படிப்பட்ட தக்காளி விலை கிலோவுக்கு ரூ.100 என்று 'சதம்' அடித்தது இன்னும் கலக்கத்தை ஏற்படுத்தியது. வழக்கமாக போதிய விலை இல்லாமல் தக்காளி குப்பையில் கொட்டப்பட்டன. தக்காளி தோட்டத்தை மாடுகள் மேய விட்ட விவசாயிகள் என்ற செய்திக்கு முற்றிலும் மாற்றாக தக்காளி விலை உயர்வு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.
ஈரோட்டில் நேற்றும் தக்காளி விலை ஒரு படி மேலாகத்தான் இருந்தது. தரமான தக்காளி ஒரு கிலோ ரூ.100, 2-ம் மற்றும் 3-ம் தர தக்காளி ரூ.70, ரூ.65 என்ற விலைகளுக்கு விற்பனையாகின. தக்காளி விலை உயர்வுக்கு காரணம் வரத்து குறைவு என்பதே கூறப்படுகிறது. விளைச்சல் குறைவால் சமீபகாலமாக வரத்து குறைந்து உள்ளது. வழக்கமாக ஈரோடு சந்தைக்கு மட்டும் சுமார் 5 ஆயிரம் பெட்டி தக்காளி வரும். கடந்த சில மாதங்களாக அது 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரம் பெட்டிகளாக குறைந்தது. நேற்று அதுவே வெறும் 900 பெட்டிகள் மட்டுமே வந்திருக்கிறது. எனவே விலை சர்ரென்று விண்ணை நோக்கி பாய்ந்தது.
அச்சம்
தக்காளியுடன், கத்தரிக்காய், வெண்டைக்காய், இஞ்சி என்று அனைத்து வகை காய்கறிகளும் விலை உயர்ந்து விட்டது. இதனால் சாதாரண அடித்தட்டு, நடுத்தர குடும்ப மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுபற்றி ஈரோட்டை சேர்ந்த இல்லத்தரசிகள், வியாபாரிகளின் கருத்துகள் வருமாறு:-
வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த இல்லத்தரசி மாலினி:-
வீட்டுக்கு காய்கறி மிக அவசியமானது. நான் எப்போதும் காய்கறி சந்தையில் இருந்து வாரத்துக்கு 2 முறை காய்கள் வாங்கி விடுவேன். முன்பு ரூ.100 அல்லது ரூ.150 இருந்தால் ஒரு பை நிறைய காய்கள் வாங்க முடியும். இப்போது அதே அளவு காய்கள் வாங்க வேண்டும் என்றால் ரூ.600 தேவைப்படுகிறது. இது ஏழை, நடுத்தர மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். சமீப காலமாக வீட்டில் தக்காளி சட்னி வைப்பதே இல்லை. காய் கூட்டு, பொரியல், சாம்பார் செய்தாலே அதிக செலவாகிறது. இப்படியே போனால் சாப்பிட காய்கறிகள் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் இருக்கிறது.
வரலாறு காணாத வகையில்...
கருங்கல்பாளையம் கே.என்.கே ரோடு பகுதியை சேர்ந்த இல்லத்தரசி சகானா:-
சமீப காலமாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ரம்ஜான் காலத்திலும், தொடர்ந்து பக்ரீத் காலத்திலும் காய்கறி விலை கடுமையாக உயர்கிறது. பிரியாணி செய்ய தக்காளி, இஞ்சி அதிகம் தேவைப்படும். இந்த 2 பொருட்களும் தற்போது மிகவும் கடுமையாக விலை உயர்ந்து விட்டன. இஞ்சி விலை வரலாறு காணாத வகையில் கிலோ ரூ.220-க்கு விற்கிறது. இதில் வெங்காயம் மட்டுமே சற்று விலை குறைவாக இருக்கிறது.
காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீணாகின்றன
ஈரோடு நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரி செல்வகுமார் என்கிற லெமன் செல்வம்:-
பொதுவாக இங்கிலீஸ் காய்கறிகள் எனப்படும் கேரட், பீட்ரூட் போன்றவை பெரிய அளவில் விலை உயர்வு இருக்காது. ஆனால் சமீபகாலமாக இந்த காய்கள் அனைத்தும் உயர்ந்த நிலையிலேயே உள்ளன. சில நாட்களுக்கு முன்பு ரூ.100-க்கு இருந்த ஒரு கிலோ கேரட் தற்போது ரூ.70 ஆக குறைந்து உள்ளது. இது போலவே மற்ற காய்கறிகளும் விலை உயர்வதும் குறைவதுமாக இருக்கும்.
நாட்டுக்காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்டவை வரத்தின் அடிப்படையில் விலை உயர்ந்து, குறையும். ஆனால் தற்போது இவையும் விலை உயர்ந்துதான் இருக்கிறது. இதனால் எடை கணக்கில் மிகவும் குறைவாகத்தான் பொருட்கள் விற்பனை ஆகிறது. இதன் காரணமாக காய்கறிகள் வீணாகும் நிலையும் ஏற்படுகிறது.
காத்திருப்பு
காய்கறி வியாபாரி எஸ்.தனலட்சுமி:-
இப்போதெல்லாம் மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் எப்போதும் திறந்தே இருக்கின்றன. யாராவது வந்து பொருட்கள் வாங்க மாட்டார்களா? என்று காத்து இருக்கிறார்கள். பொதுமக்களின் தேவைக்கு நாங்கள் காய்கறிகள் கொடுத்தாலும், கணக்கு பார்த்து அவர்கள் வாங்குவதை பார்க்கும்போது சிரமமாகத்தான் இருக்கிறது.
ஒரு மாதமாகும்
மேட்டுக்கடையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி:-
நமக்கு தாளவாடியில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகிறது. அங்கும் கடுமையான வெயிலும் தொடர்ந்து மழையும் இருந்ததால் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. உழவர் சந்தைக்கு விவசாயிகள் நேரடியாக கொண்டு வந்த தக்காளி கூட தரமானவையாக இல்லை. இதுபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகளிலும் இதே பிரச்சினையால்தான் ஈரோட்டுக்கு தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வரத்து குறைந்து விலை உயர்ந்து உள்ளது. இந்த நிலைமை சீராக இன்னும் குறைந்த பட்சம் ஒரு மாதமாகும்.