குமார்நகர்-சிறுபூலுவப்பட்டி பிரதான சாலை சீரமைக்கும் பணி


குமார்நகர்-சிறுபூலுவப்பட்டி பிரதான சாலை சீரமைக்கும் பணி
x

meeting

திருப்பூர்

பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் குமார்நகர்-சிறுபூலுவப்பட்டி பிரதான சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று 1-வது மண்டல கூட்டத்தில் தலைவர் உமா மகேஸ்வரி தெரிவித்தார்.

மண்டல கூட்டம்

திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசியதாவது,

நாகராஜ் (ம.தி.மு.க.):- 22-வது வார்டு பகுதியில் 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய சரியான ஊழியர்களை மாநகராட்சி நியமிக்க வேண்டும். குமார்நகர் முதல் காவிலிபாளையம்புதூர் வரை சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் 23, 24, 25, 26-வது வார்டு கவுன்சிலர்கள் சார்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெறும்.

தங்கராஜ் (அ.தி.மு.க.):- 25-வது வார்டு எஸ்.பி.நகர் பகுதியில் மழை காலங்களில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகும் நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் சாக்கடை கால்வாய் கட்டி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். தெருவிளக்குகள் அமைத்து தருமாறு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் பயனில்லை. சோளிபாளையம் மற்றும் சிறுபூலுவப்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளை உடனடியாக ஆய்வு செய்து, கட்டிடத்தை சீரமைக்க வேண்டும். சோளிபாளையம் பகுதியில் பொதுமக்கள் வெளியே வரமுடியாத அளவில் தேங்கும் மழைநீரை தற்காலிக தீர்வாக மோட்டார் வைத்து அகற்ற வேண்டும்.

ெதருநாய் தொல்லை

குணசேகரன் (பா.ஜ.க.):- 26-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணிகளை முறையாக மேற்கொள்ளாததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குமார்நகர்-சிறுபூலுவப்பட்டி பிரதான சாலையை சீரமைப்பதில் மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மெத்தனம் காட்டி வருகிறது. உடனடியாக அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

பிரேமலதா கோட்டாபாலு (தி.மு.க.):- 8 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்பட்ட குடிநீர் தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. எனவே அதை சீரமைக்க வேண்டும். வார்டில் தெருநாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செல்வராஜ் (இ.கம்யூனிஸ்டு):- 11-வது வார்டில் தண்ணீர்பந்தல் முதல் 15 வேலம்பாளையம் வரை தோண்டப்பட்ட குழிகளை மூட வேண்டும். கடந்த 3 வாரங்களாக குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. குடிநீர் கசிவு பிரச்சினையை சரி செய்து சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை சீரமைப்பு

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு மண்டல தலைவர் உமா மகேஸ்வரி சிட்டி வெங்கடாசலம் பதிலளித்து பேசியதாவது:- 1-வது மண்டலத்திற்குட்ட பகுதிகளில் குழாய் உடைப்புகள் உடனடியாக சரி செய்யப்பட்டு, குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். குமார்நகர்- சிறுபூலுவப்பட்டி பிரதான சாலை சீரமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மழை காரணமாக பணிகள் மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த கோரிக்கை தொடர்பாக மேயர் தினேஷ்குமாரிடம் தெரிவித்து பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மண்டலத்திற்கு தேவையான நிதி ஒப்புதல் கிடைத்துள்ளது. எனவே 1-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இதில் மண்டலத்திற்குட்பட்ட கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story