நர்சிங் இன்ஸ்டிடியூட் மேலாளரிடம் ரூ.2 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
Fraud
விழுப்புரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 40). இவர் தனியார் நர்சிங் இன்ஸ்டிடியூட்டில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய தாயின் செல்போன் எண்ணை தொடர்புகொண்டு பேசிய மர்ம நபர், ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் பரிசுத்தொகை விழுந்துள்ளதாகவும் அதனை பெற முன்பணத்திற்கும், ஜி.எஸ்.டி. வரிக்காகவும் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதை நம்பிய பிரேம்குமார், கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 26-ந் தேதி வரையிலான நாட்களில் தான் மற்றும் தனது தாய் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலம் அந்த நபர் கூறிய எண்ணுக்கு 11 தவணைகளாக ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 401-ஐ அனுப்பியுள்ளார். ஆனால் இந்த தொகையை பெற்ற மர்ம நபர், பரிசுத்தொகை ஏதும் அனுப்பி வைக்காமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
இதுகுறித்து பிரேம்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.