கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்காக 20 வாகனங்கள்: ஈரோடு மாவட்டத்தில் 13 புதிய ரேஷன் கடைகள்- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்


கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்காக 20 வாகனங்கள்: ஈரோடு மாவட்டத்தில் 13 புதிய ரேஷன் கடைகள்- அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Jun 2023 10:01 PM GMT (Updated: 27 Jun 2023 7:53 AM GMT)

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்காக 20 வாகனங்களின் செயல்பாடுகளையும், மாவட்டத்தில் புதிதாக 13 ரேஷன் கடைகளையும் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்காக 20 வாகனங்களின் செயல்பாடுகளையும், மாவட்டத்தில் புதிதாக 13 ரேஷன் கடைகளையும் அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

அமைச்சர் திறந்து வைத்தார்

ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நாகமணி கந்தசாமி, ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., துணை மேயர் வி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கஸ்தூரி முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார். சோலாரில் உள்ள ஈரோடு கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி சங்கத்துக்கு ரூ.25 லட்சத்து 3 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட கட்டிடம். சத்தியமங்கலம் ராஜன்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதியில் ரூ.21 லட்சத்து 57 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட 100 டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, இருட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வேளாண் உள்கட்டமைப்பு நிதியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கு என மொத்தம் ரூ.66 லட்சத்து 60 ஆயிரம் செலவில் கட்டப்பட்ட 3 புதிய கட்டிடங்களின் கல்வெட்டுகளையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

20 வாகனங்கள்-ரேஷன் கடைகள்

இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 20 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அவற்றில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளின் வேளாண்மை பயன்பாட்டுக்காக வாங்கப்பட்டு உள்ள 20 புதிய வாகனங்கள் (மினி டெம்போக்கள், மினி லாரிகள்) செயல்பாட்டை கொடி அசைத்து அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், கூட்டுறவுத்துறையின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நசியனூர், பி.பி.அக்ரகாரம், கஸ்பாபேட்டை, வரப்பாளையம், கோசணம், பருவாச்சி பின்னானூர், தாளவாடி தொட்டகாஜனூர் என 7 பகுதிகளுக்கு புதிய ரேஷன் கடைகளை அமைச்சர் திறந்து வைத்து செயல்பாடுகளை தொடங்கி வைத்தார். கண்ணம்மாபுரம் நாச்சிவலசு, பெரியகொடிவேரி அருகே தாசப்பகவுண்டனூர், பர்கூர் பெரியூர், திப்பிச்செட்டிபாளையம் அருகே வாய்க்கால் பாளையம், நசியனூர் மாகாளியம்மன் கோவில் ஆகிய 5 பகுதிகளில் புதிய பகுதி நேர ரேஷன் கடைகள், பர்கூர் மலை தம்முரெட்டி பகுதிக்கு புதிய நடமாடும் ரேஷன் கடை என மொத்தம் 13 ரேஷன் கடைகளை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கே.ராஜ்குமார், மத்திய கூட்டுறவு வங்கி முதன்மை வருவாய் அதிகாரி ஆர்.ராமநாதன், ஈரோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கு.நர்மதா, துணைப்பதிவாளர் பா.ரவிச்சந்திரன், துணைப்பதிவாளர் (பொதுவினியோகம்) கே.கந்தசாமி, ஈரோடு மாவட்ட வழங்கல் அதிகாரி இலாகிஜான், தாசில்தார் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story