மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாைல மறியல்; 2,174 பேர் கைது


மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாைல மறியல்; 2,174 பேர் கைது
x

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2,174 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2,174 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருந்துறை

விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாைல மறியல் போராட்டம் நடைபெற்றது. பெருந்துறை பழைய பஸ்நிலையம் அருகே நால்ரோடு சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் பெருந்துறை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில செயலாளர் சின்னசாமி, ஈரோடு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் செயலாளர் திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் வக்கீல் துளசிமணி, பெருந்துறை ஒன்றிய துணைச் செயலாளர் கே.ஆர்.தங்கவேல் உள்பட கட்சியினர் பலர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதையடுத்து பெருந்துறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 50 பேரை கைது செய்தனர்.

டி.என்.பாளையம்

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் தலைமையில் டி.என்.பாளையம் அண்ணா சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பங்களாப்புதூர் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 23 பேரை கைது செய்தனர். அனைவரையும் அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர். இதேபோல் டி.என்.பாளையம் அருகே உள்ள கே.என்.பாளையம் ஸ்டேட் வங்கி முன்பு மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துக்குமார் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர்.

அந்தியூர்

அந்தியூர் ரவுண்டானாவில் கனரா வங்கி முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வட்ட குழுச் செயலாளர் தேவராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சாலை மறியலில் ஈடுபட்ட 54 பெண்கள் உள்பட 87 பேரை போலீசார் கைது செய்தனர்.

பவானிசாகர்

பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தில் இந்தியன் வங்கி முன்பு செல்லும் ரோட்டில் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பவானிசாகர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 66 பேரை கைது செய்தனர். இதேபோல் நெரிஞ்சிப்பேட்டை தபால் அலுவலகம் முன்பும், ராஜன் நகர் இந்தியன் வங்கி முன்பும் சாலை மறியலில் ஈடுபட்ட 180 பேரை போலீசார் கைது செய்தனர்.

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் செண்பகப்புதூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுடர் நடராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 140 பெண்கள் உள்பட 154 பேரை சத்தியமங்கலம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் சிக்கரசம்பாளையத்தில் 99 பெண்கள் உள்பட 111 பேரும், கொமராபாளையத்தில் 21 பெண்கள் உள்பட 40 பேரும், அரியப்பம்பாளையத்தில் 11 பேரும், அய்யன்சாலையில் 160 பெண்கள் உட்பட 180 பேரும் சாலை மறியலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்். அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று மட்டும் 19 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 2 ஆயிரத்து 174 பேர் கைது செய்யப்பட்டனர். அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்ட அனைவரும் நேற்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story