முட்டை உடைவதை தவிர்ப்பது எப்படி?


முட்டை உடைவதை தவிர்ப்பது எப்படி?
x
தினத்தந்தி 15 Nov 2022 7:30 PM GMT (Updated: 15 Nov 2022 7:30 PM GMT)

How to avoid breaking eggs?

நாமக்கல்

கோழிகளில் முட்டை உடைவை தடுக்க தீவனத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி-3 அளவை அதிகரித்து கொடுக்க வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 8 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (வியாழன்) மற்றும் நாளைமறுநாள் (வெள்ளிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 66.2 டிகிரியாகவும் இருக்கும்.

காற்று மணிக்கு 4 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 55 சதவீதமாகவும், அதிகபட்சம் 80 சதவீதமாகவும் இருக்கும்.

முட்டை உடைவு

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது நிலவும் வடகிழக்கு பருவமழை வானிலையில் அதிகமழை மற்றும் குறைவான வெப்பம் இருக்கும். இந்த தட்பவெப்ப நிலையில் கோழிகளில் தீவனம் எடுக்கும் அளவு உயர தொடங்கும். நாள் ஒன்றுக்கு ஒரு கோழி இயல்பாக உட்கொள்ளும் 110 கிராம் தீவன அளவை விட அதிகரித்து காணப்படும்.

இதனால் 40 வாரத்திற்கு மேற்பட்ட கோழிகளில் முட்டை எடை கூடுதலாக இருக்கும். அதிக எடை கொண்ட முட்டை உடைவதற்கு வழிவகுக்கும். எனவே இதை கட்டுப்படுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தீவனத்தில் அதிக அளவு எரிசக்தி உள்ளவாறு பார்த்து கொள்ள வேண்டும். மேலும் தீவனத்தில் சற்றே அதிக அளவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி-3 சத்தினை உயர்த்தி கொடுக்க வேண்டும். இதன் மூலம் முட்டை ஓடுகள் உடையும் குறைபாடுகளை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story