கோவையில் ஒரே ஆண்டில் 4,253 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு
4,253 electric vehicles registered in Coimbatore in a single year
கோவையில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி பதிவு செய்வது அதிகரித்துள்ளதாகவும், ஒரே ஆண்டில் 4,253 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் சிவகுமரன் தெரிவித்தார்.
எலெக்ட்ரிக் வாகனங்கள்
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு அடுத்த படியாக கோவையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோவை நகரில் கடந்த 2020-ம் ஆண்டு எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவு 1,390 ஆக இருந்தது. 2021-ம் ஆண்டில் இது 100 சதவீதமாக உயர்ந்து 2,828 ஆக உயர்ந்தது.
இந்த ஆண்டு இதுவரை 4,253 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் இருசக்கர வாகனங்கள் மட்டும் 3,884, கார்கள் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் 369 ஆகும். இதில் அதிகபட்சமாக கோவை மத்திய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மட்டும்1,261 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவை வட்டார போக்குவரத்து இணை ஆணையாளர் சிவ குமரன் கூறியதாவது:-
சாலை வரி கிடையாது
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிவரை சாலை வரி கிடையாது. எனவே வாகன பதிவுகள் அதிகரித்துள்ளன. தற்போது பல்வேறு இடங்களில் பெட்ரோல் பங்குகள், ஓட்டல்களில் சார்ஜ் செய்யும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இ-வாகனம் என்று அழைக்கப்படும் இந்த வாகனங்களுக்கு பச்சை நிறத்தில் நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்படுகிறது.
டீசல், பெட்ரோல் வாகனங்கள் ரூ.10 லட்சத்துக்கு மேல் வாங்கினால் 15 சதவீதம் சாலை வரியும், ரூ.10 லட்சத்துக்குள் வாங்கினால் 10 சதவீதமும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.