பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் வரி உயர்வு குறைவு
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் குறைவாக வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக நாமக்கல்லில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார்.
அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் வாங்கிலி தலைமையில் 2023-26-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் 50-வது மகாசபை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் சங்கத் தலைவராக அருள், செயலாளராக ஆனந்தன், பொருளாளராக சீனிவாசன் ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
மேலும் உதவி தலைவர், உதவி செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்றனர்.
இதில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பொன்னுசாமி, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ், ஏ.ஐ.எம்.டி.சி. நிதிக்குழு சேர்மன் சுந்தர்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினா்.
வரி குறைவு
கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் வாகனங்களின் விலையும், பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்த போதிலும் பல்வேறு வாகன வகைகளை பொறுத்து 15 ஆண்டுகள் முதல் 23 ஆண்டுகள் வரை வரி உயர்த்தப்படாமல் இருந்தது. சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அத்தகைய திட்டங்களை செயல்படுத்த வரி வருவாயை உயர்த்த வேண்டி இருந்தது.
அதனால் பிற மாநிலங்களில் உள்ள வரிகளை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் குறைவாகவே வரி உயர்த்தப்பட்டு உள்ளது. பிற மாநிலங்களைவிட வரி உயர்த்தப்பட்டு உள்ளதாக லாரிகள் உரிமையாளர்கள் கூறுவது குறித்து முதல்-அமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஆன்லைன் வழக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.
முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர்,
மின்சார பஸ்களுக்கான டெண்டரை விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் தொடர்பான கோரிக்கை குறித்து முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என கூறினார்.