ஒரே நாளில் ரூ.1 கோடி சொத்து வரி வசூல்


ஒரே நாளில் ரூ.1 கோடி சொத்து வரி வசூல்
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நகராட்சியில் முதல் முறையாக ஒரே நாளில் ரூ.1 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகராட்சியில் முதல் முறையாக ஒரே நாளில் ரூ.1 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.1 கோடி வசூல்

பொள்ளாச்சி நகராட்சியில் 100 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்த அரசு உத்தரவிட்டது. உடனே நகராட்சி கூட்டத்தில் வரியை குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து வரியை குறைத்து அரசாணை பெறப்பட்டது.

இதற்கிடையில் நிலுவையில் உள்ள வரியை செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன் காரணமாக நகராட்சி வரி வசூல் மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.1 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

5 சதவீத ஊக்கத்தொகை

பொள்ளாச்சி நகராட்சியில் 25 ஆயிரத்து 984 பேர் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இதன் மூலம் ரூ.26 கோடியே 4 லட்சம் வசூல் செய்ய வேண்டிய உள்ளது. நகராட்சிக்கு 2023-24-ம் ஆண்டு செலுத்த வேண்டிய வரியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) வரை செலுத்துவோருக்கு அரையாண்டு தொகையில் 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொள்ளாச்சி நகராட்சியில் முதல் முறையாக இன்று (நேற்று) ஒரே நாளில் 1,201 பேர் செலுத்திய சொத்து வரி மூலம் ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. நாளையும்(இன்று) நகராட்சி அலுவலகத்தில் 5 கவுண்ட்டர்கள், பாலகோபாலபுரம் வரி வசூல் மையத்தில் 2 கவுண்ட்டர்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரி வசூல் செய்யப்படும். இது தவிர ஆன்லைன் மூலமாகவும் வரி செலுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story