ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளி
ரூ.1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளியை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூர் அருகே கெல்லீஸ் சாலையில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட அரசு மாதிரி உண்டு உறைவிடப்பள்ளி திறப்பு விழா கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.காந்தி, தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆகவே பள்ளி பருவத்தில் மாணவ-மாணவிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் பல்வேறு அரசு போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி தொலைநோக்கு பார்வையுடன் படித்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., ராணிப்பேட்டை நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.