ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்

நெகமம் அருகே பெரியகளந்தையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 313 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
நெகமம்,
நெகமம் அருகே பெரியகளந்தையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் 313 பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
மக்கள் தொடர்பு முகாம்
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பெரியகளந்தையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா வரவேற்றார். உதவி கலெக்டர் (பயிற்சி) ஆஷிக் அலி, பெரியகளந்தை ஊராட்சி மன்ற தலைவர் ஆதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முகாமில், 313 பயனாளர்களுக்கு, ரூ.1.22 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கிராந்தி குமார் வழங்கினார். மேலும், முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்
முகாமில் கலெக்டர் கிராந்தி குமார் பேசியதாவது:-
மக்கள் தொடர்பு முகாம் மூலம் பொதுமக்களின் தேவைகளை அறிந்து, அதனை பூர்த்தி செய்ய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மகளிர் திட்டம் சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக வங்கி கடன் பெற்று மகளிர் சுயதொழில் தொடங்க முடியும்.
கோவை மாவட்டம் தற்போது தொழில் துறையில் வளர்ந்து வருகிறது. இங்கு அதிக வேலைவாய்ப்பு உள்ளது. எனவே, உங்கள் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வைக்க வேண்டும். கல்வி கடனில், முதல் பட்டதாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
புதிய குடிநீர் திட்டங்கள்
கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் உள்ளது. இதற்கு தீர்வாக புதிய குழாய் அமைத்தல் மற்றும் புதிய குடிநீர் வழங்கும் திட்டங்கள் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






