வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மோசடி
வியாபாரியிடம் 1 கிலோ தங்கம் மோசடி
கோவை
கோவையில் வியாபாரியிடம் போலி நகைகளை கொடுத்து 1 கிலோ தங்கம் மோசடி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நகை வியாபாரி
கோவை கடைவீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 56). நகை வியாபாரி. இவர் பெங்களூருவில் உள்ள நகைக்கடையை சேர்ந்த சுனில் (50) என்பவரிடம் தொழில் ரீதியான பழக்கம் வைத்திருந்தார். அவரிடம் தங்க நகை மற்றும் தங்க கட்டிகளை கொடுத்து வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் சுனில் கோவை வந்தாா். அப்போது சுனில் தான் வைத்து இருந்த 965 கிராம் எடையிலான நகைகளை தியாகராஜனிடம் கொடுத்தார்.
அந்த நகைகளுக்கு பதிலாக தியாகராஜன் 1 கிலோ 3 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை கொடுத்ததாக தெரிகிறது. அதனை வாங்கிக்கொண்ட சுனில், மீதி உள்ள தங்கத்துக்குரிய பணத்தை சிறிது நேரத்தில் கொண்டு வந்து தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
1 கிலோ தங்கம் மோசடி
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் சுனில் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தியாகராஜன் தன்னிடம் சுனில் கொடுத்த நகைகளை பரிசோதனை செய்தார். அப்போது அவர் கொடுத்து சென்ற 965 கிராம் நகைகள் போலியானது என்பதும், மோசடி செய்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தியாகராஜன் உடனே சுனிலின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார்.
ஆனால் சுவிட்ச்-ஆப் என்று வந்தது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து கடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், தங்க கட்டிகளை வாங்கி மோசடி செய்த சுனில் மீது போலீசார் மோசடி, நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.