இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி


இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 27 Aug 2022 11:57 PM IST (Updated: 28 Aug 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி இளம்பெண்ணிடம் ரூ.1¾ லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர்கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கார் பரிசு

பாம்பன் அருகே உள்ள பனந்தோப்பு பகுதியை சேர்ந்த யோசுவா மனைவி அனுசுயா (வயது 21). இவர் பிரபல ஆன்லைன் வர்த்தக செயலி மூலம் அடிக்கடி துணிகள் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இந்நிலையில் இவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஒரு பெண் அந்த வர்த்தக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்கள் நிறுவனத்தின் 7-வது ஆண்டுவிழாவை முன்னிட்டு பொருட்கள் வாங்கியவர்களின் பட்டியலை வைத்து நடத்திய குலுக்களில் ரூ.12 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கார் பரிசு விழுந்திருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், அந்த காரை பெறுவதற்கு செயல்முறை கட்டணமாக ரூ.12 ஆயிரத்து 800 செலுத்த வேண்டும் என்று கூறி, வாட்ஸ்-அப் எண்ணிற்கு கார் பரிசு விழுந்திருப்பதற்கான கடிதத்தை அனுப்பி உள்ளார். இதை நம்பிய அனுசுயா தனக்கு கார் வேண்டாம் என்றும் அதற்கான பணத்தை தருமாறும் கூறினார். அதற்கு சம்மதம் தெரிவித்த அப்பெண் அனுசுயாவின் வங்கி கணக்கு புத்தகம், பாஸ்புக், ஆதார்கார்டு எண் முதலியவற்றை பெற்றுக்கொண்டார்.

ரூ.1¾ லட்சம் மோசடி

செயல்முறை கட்டணத்தை செலுத்தினால் உடனடியாக அவரின் பரிசுத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அனுசுயா அவர்கள் கேட்டபடி ரூ.12 ஆயிரத்து 800 அனுப்பினார். மீண்டும் பேசிய பெண், வரி உள்ளிட்டவைகளை செலுத்த வேண்டும் என்று பல்வேறு காரணங்களை கூறி ரூ.1 லட்சத்து 77 ஆயிரத்து 100 வரை பெற்றுள்ளார். பின்னர் அந்த பெண் தொடர்பு கொண்ட செல்போன் எண் சுவிட்சு் ஆப் செய்யப்பட்டது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனுசுயா இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமநாதபுரம் சைபர்கிரைம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த பெண்ணை தேடி வருகின்றனர்.


Next Story