ஊட்டியில் கோடை சீசனில் 1¾ லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்


ஊட்டியில் கோடை சீசனில் 1¾ லட்சம் கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:30 AM IST (Updated: 6 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் கோடைசீசனான 2 மாதத்தில் மட்டும் 24 லட்சம் கிலோ குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரித்து திறம்பட பணியாற்றி உள்ளனர். இதில் 1¾ லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகி உள்ளது.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் கோடைசீசனான 2 மாதத்தில் மட்டும் 24 லட்சம் கிலோ குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் சேகரித்து திறம்பட பணியாற்றி உள்ளனர். இதில் 1¾ லட்சம் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரமாகி உள்ளது.

ஊட்டி நகராட்சி

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1¼ லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் என 3500 தனியார் நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர்.

ஊட்டி நகர பகுதிகளில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்டவைகள் அதிகம் உள்ளதால் கமர்சியல் சாலை, பூங்கா சாலை, லோயர் பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பழத்தோல், முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகளை தனியாகவும், பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும், மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசி பொருட்கள், சானிட்டரி நாப்கின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் வீட்டு உபயோக பொருட்களை தனியாகவும் பிரித்தும் சேகரிக்கப்படுகின்றன. நாள் ஒன்றிற்கு சுமார் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.

இவை தீட்டுக்கல் குப்பை கிடங்கு, காந்தல், புதுமந்து பகுதிகளில் உள்ள நுண்ணுயிர் உர தயாரிப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவற்றை விவசாயிகள் குறைந்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

கோடை சீசன்

இந்தநிலையில் கோடை சீசனான கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தினசரி 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்தனர். இதனால் வழக்கத்தைவிட அதிக அளவில் குப்பைகள் சேகரமானது. மேலும் தாவரவியல் பூங்கா பெரிய புல்வெளி மைதானம், நுழைவுவாயில் என பல்வேறு இடங்களில் குப்பைகள் அதிகமாக தேங்கி கிடந்தது. இந்தநிலையில் ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின் பேரில், தூய்மை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பேர் தினமும் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் கடந்த 2 மாதங்களில் மட்டும் 24 லட்சம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது. இதில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 1 லட்சத்து 72 ஆயிரம் கிலோ சேகரமாகி உள்ளது.

இந்த கூடுதல் பணிச்சுமையால் தூய்மை பணியாளர்கள் தினந்தோறும் திணறி சிரமம் அடைந்தனர். எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர பொதுமக்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் வழக்கத்தை விட இரு மடங்கு பிளாஸ்டிக் பொருட்கள் வந்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story