சங்கராபுரத்தில்பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள்உரிய ஆவணங்கள் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்
சங்கராபுரத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க 1 லட்சம் மரக்கன்றுகள் வழங்க தயார் நிலையில் உள்ளது. தேவையானவர்கள் உரிய ஆவணங்கள் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சங்கராபுரம்,
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சரின் பசுமையாக்கல் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் ஷஷாங் கஷ்யப் ரவி உத்தரவுப்படி, சங்கராபுரம் வனச்சரக அலுவலர் சாயாதேவி அறிவுரையின் படி வனத்துறை மூலம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சங்கராபுரம் அருகே உள்ள குளத்தூர் கிராமம் ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் தமிழ்நாடு வனத்துறை மூலம் அமைக்கப்பட்ட நாற்றங்காலில் பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதில் தேக்கு, மா, நாவல், இலுப்பை, புங்கன், பலா, பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகை மரங்கள் என்று மொத்தம் 1 லட்சத்து 20 ஆயிரம் மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஆவணங்கள்
மரக்கன்றுகளை பெற்று நடவு செய்ய ஆர்வமுள்ள பயனாளிகள் ஆதார் கார்டு நகல், 2 புகைப்படம், விவசாயிகளாக இருந்தால் நிலத்தின் சிட்ட நகல் ஆகியவற்றை அளித்து இலவசமாக மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம்.
அதே போன்று, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் என்று பொது இடங்கள், ஏரி, குளக்கரை போன்றவற்றிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய இத்திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும்.
எனவே விரும்பமுள்ள பயனாளிகள் எஸ்.குளத்தூர் அல்லது கள்ளக்குறிச்சியில் வ.உ.சி. நகர் 6-வது குறுக்கு ரோட்டில் இயங்கி வரும் சங்கராபுரம் வனச்சரக அலுவலகத்தில் வனவர்கள் விஸ்வநாதன், அய்யாக்கண்ணு, சுகன்யா ஆகியோரை நேரில் அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.