பேக்கரியில் ரூ.1¾ லட்சம் திருட்டு


பேக்கரியில் ரூ.1¾ லட்சம் திருட்டு
x

பேக்கரியில் ரூ.1¾ லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

திருச்சி

திருட்டு

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குணா (வயது 30). இவர் சத்திரம் பஸ் நிலையம் கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பிரபல பேக்கரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இரவு 11 மணிக்கு பேக்கரியை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து கடையின் பூட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது மேற்கூரைப்பகுதி உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த ரூ.1¾ லட்சம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குணா கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பணம் பறித்த ரவுடி

*திருச்சி தாராநல்லூர் விசுவாஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 37). இவர் எடத்தெரு பொது கழிப்பிடம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த திருச்சி எடத்தெரு பிள்ளை மாநகர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜாக்கிஜான் (28) என்பவர், அவரிடம் செலவுக்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த ரவுடி கத்தியை காட்டி, அவரிடமிருந்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து ராஜா கொடுத்த புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி ஜாக்கிஜானை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விதவை பெண்ணிடம் தகராறு

*திருச்சி கோரிமேடு புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (45). சமீபத்தில் இவரது கணவர் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்தநிலையில் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்ற வாலிபர் குடிபோதையில் சென்று, தகராறு செய்து அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி மாயம்

*பெட்டவாய்த்தலை கணேசபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தீபிகா (19). இவர் சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இவரை, முருகேசன் சத்திரம் பஸ் நிலையம் அழைத்து வந்து கல்லூரிக்கு பஸ் ஏற்றி விட்டார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன் கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

*திருச்சி கே.கே.நகர் பகுதியில் கஞ்சா விற்றதாக நாகமங்கலம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (25), பாஸ்கர் (23) ஆகியோரை கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கைது செய்தார். 2 பேரிடம் இருந்து 2 செல்போன் மற்றும் 1 கிலோ 321 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story