ரூ.1½ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
கும்பகோணத்தில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தில், சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1½ லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
ரகசிய தகவல்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதிக்கு வெளி மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கும்பகோணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்தி வாசன் ஆலோசனையின் பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், ஏட்டு காமராஜ், பிரகாசன், ராஜ்குமார் உள்பட போலீசார் கும்பகோணம் ராமசாமி கோவில் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சொகுசு காரில் கடத்தல்
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். இதில் அந்த காரில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 150 கிலோ எடை புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த சொகுசு காரை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கும்பகோணம் அரிய திடல் பகுதியைச் சேர்ந்த ஜெகன்நாதன் மகன் பிரகாஷ்(வயது 40) என்பதும், அவர் காரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மேலும் அவர் திருநாகேஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து கும்பகோணம் பகுதியில் விற்பனைக்காக எடுத்து வந்ததாக தெரிவித்தார். இதை தொடர்ந்து காரில் இருந்த 150 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.பின்னர் பிரகாஷ் தெரிவித்த குடோனுக்கு அவரை அழைத்து சென்று அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள 500 கிலோ புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.