2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம், 20 செல்போன்கள் திருட்டு
பரமத்திவேலூர் அருகே 2 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம், 20 செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
பரமத்திவேலூர்
மளிகை கடையில் திருட்டு
பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 42). இவர் பரமத்தியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த சுதாகரன் (35) என்பவர் செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். சுதாகரன் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடையை திறக்கவில்லை. சுப்பிரமணி தனது மளிகை கடையை நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலை சுப்பிரமணி மளிகை கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது டேபிள் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்க பணம் ரூ.80 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
20 செல்போன்கள் திருட்டு
இந்த நிலையில் மளிகை கடைக்கு அருகில் இருந்த செல்போன் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து செல்போன் கடை உரிமையாளர் சுதாகரனுக்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த சுதாகரன் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ.55 ஆயிரம் மற்றும் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 20-க்கும் மேற்பட்ட புதிய செல்போன்கள் திருடிச்செல்லப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்து சுப்பிரமணி மற்றும் சுதாகரன் ஆகியோர் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மளிகை கடை மற்றும் செல்போன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் செல்போன் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை மர்ம நபர்கள் உடைத்ததுடன் அங்கிருந்த டி.வி.யையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து மளிகை கடை மற்றும் செல்போன் கடைகளில் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.