1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


தினத்தந்தி 11 Oct 2023 11:00 PM GMT (Updated: 11 Oct 2023 11:00 PM GMT)

திண்டுக்கல்லில் தடையை மீறி விற்பனைக்கு வைத்திருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அந்த கடை-குடோனை மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

திண்டுக்கல்

பிளாஸ்டிக் பொருட்கள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து மாநகராட்சி முழுவதும் கடைகளை தினமும் சோதனை நடத்தும்படி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சுகாதார ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் தினமும் கடைகளில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

மேலும் மேற்கு ரதவீதி, கடைவீதி, மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் இருக்கும் மொத்த விற்பனை கடைகளை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் மேற்கு ரதவீதியில் உள்ள ஒரு மொத்த விற்பனை கடையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

1½ டன் பறிமுதல்

இதைத் தொடர்ந்து நகர்நல அலுவலர் செபாஸ்டியன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், தங்கவேல், கேசவன், செல்வராணி, கீதா ஆகியோர் விரைந்து சென்று அந்த கடையில் சோதனை நடத்தினர். அப்போது கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவை இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனால் அந்த கடைக்கு சொந்தமான குடோனிலும் அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். அங்கும் மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தன. இதையடுத்து அந்த கடை மற்றும் குடோனில் இருந்த 1½ டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு அந்த கடை மற்றும் குடோனை பூட்டி அதிகாரிகள் 'சீல்' வைத்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


Next Story